சீனா உடனான உறவு இயல்பாக இல்லை!: சைப்ரஸில் வெளியுறவு அமைச்சர் பேச்சு!!
சீனாவுடனான இந்திய உறவுகள் இயல்பானதாக இல்லை என்று சைப்ரஸ் நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது முதல் அதிகாரபூர்வ பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் முன்னாள் சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் நிக்கோஸ் கிறிஸ்டோடோலிட்ஸை சந்தித்தார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசானது, தெளிவான பொருளாதார பார்வை கொண்டுள்ளதால் அந்நிய நேரடி முதலீட்டிற்கு சிறந்த இடமாக இந்தியா உள்ளது. 2025க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் பெரிய உற்பத்தி மையமாக மாற்றுவதே எங்களது இலக்கு.
அண்டை நாடுகளுடனும், அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவை வைத்துக் கொள்ள இந்தியா விரும்புகிறது. ஆனால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுடன் ஒருபோதும் உறவை வைத்துக் கொள்ள மாட்டோம். எல்லை பாதுகாப்பு என்பது இந்தியாவிற்கு இன்று சவாலாக உள்ளது. சீனாவுடனான இந்திய உறவுகள் இயல்பானதாக இல்லை என்பதை அனைவரும் அறிவோம். சைப்ரஸ் நாட்டுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது’ என்றார்.