புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரில் போலி மருந்து தயாரித்து விநியோகம்: கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு கடிதம்!!
புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகளை தயாரிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சப்ளை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்டு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.
இவ்விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேச மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர் அளித்த புகாரின் பேரில், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைவர் வி.ஜி.சோமானி, மாநில மருந்து ஆய்வாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
வைட்டமின் டி மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள், வலி நிவாரணி ஜெரோடால், ஒவ்வாமை எதிர்ப்பு, கார்டியோ மருந்து அடோர்வா, ஸ்டேடின் மருந்து ரோஸ்டே போன்றவை அடங்கும். ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் நடத்திய சோதனையில் போலி மருந்துகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் யாவும், பிரபலமான மருந்து நிறுவனங்களின் பிராண்டுகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகளை தயாரிக்கும் குறித்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.