;
Athirady Tamil News

திருப்பதியில் 2 நாள் இலவச தரிசன டிக்கெட் ரத்து; தமிழகத்தில் இருந்து 25 சிறப்பு பஸ்கள்: இன்றிரவு முதல் 11ம் தேதி வரை இயக்கப்படும்!!

0

திருப்பதியில் இன்றும், நாளையும் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்கள் டிசம்பர் 31ம் தேதி(இன்று), அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி(நாளை) வழங்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டிக்கெட்டுகள் என்று 10 நாட்களுக்கு 4.50 லட்சம் டிக்கெட்டுகள் 1ம் தேதி மதியம் 2 மணிக்கு திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள 9 இடங்களில் கவுன்டர்களில் வழங்கப்படும். மேலும், 31ம் தேதி(இன்று) முதல் 11ம் தேதி வரை ஆப்லைனில் திருப்பதி மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப்பட்டு வந்த வாணி அறக்கட்டளைக்கான ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறும் விஐபி டிக்கெட் வழங்குவது ரத்து செய்யப்படுகிறது’ என அதில் கூறப்பட்டிருந்தது.

25 சிறப்பு பஸ்கள்: ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று முதல் வரும் 11ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி அதிகளவிலான பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது. திருப்பதி-திருமலை இடையே தற்போது 1,100 ட்ரிப்புகள் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கூடுதலாக வர இருக்கும் பக்தர்களின் வசதிக்காக 1,769 ட்ரிப்புகள் இயக்க ஆந்திர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாக 25 பஸ்கள் திருமலைக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்றிரவு முதல் 11ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.