பொலிவியாவில் சாண்டா குரூஸ் மாகாண ஆளுநர் அதிரடி கைது: 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது..!!
பொலிவியாவின் சாண்டா குரூஸ் மாகாணத்தின் ஆளுநர் லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ புதன் கிழமை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். இதனை அடுத்து அந்த நாட்டில் பெரும் கலவரம் வெடித்தது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சாண்டா குரூஸ் மாகாணத்தின் ஆளுநரான லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ வலதுசாரி எதிர்க்கட்சி தலைவர்களில் முக்கியமானவர். இவர் கடந்த புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று அந்த நாட்டில் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் கலவரக்காரர்கள் கார்களை எரித்து நெடுஞ்சாலைகளை தடுத்தனர். பகலில் தலை நகரான லாபாஸ் நகரை சுற்றிலும் டயர்களை சாலையில் போட்டு எரித்தனர். இரவு வேலையில் மாகாண தலைநகரின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்ட காரர்கள் கார்கள் மற்றும் டயர்களை எரித்தனர். இதனை தடுத்த அரசு படைகள் வாகனத்தை நோக்கி சுட்டும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
கடந்த 2019ல் பொலிவியாவின் அதிபராக பதவிவகித்த ஈவோ மோரல்ஸ்கு எதிராக சதியில் ஈடுபட்டதாக நடைபெற்ற விசாரணையில் ஆளுநர் லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிவியா அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. பொலிவியாவின் நிர்வாக தலைநகரான லாபாஸ்க்கு, கைது செய்யப்பட்ட காமக்சோவை மாற்றக்கூடாது என வலியுறுத்தி இந்த கலவரம் பரவியுள்ளது. எனினும் கலவரத்தின் சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.