உலகம் கொரோனா தரவுகளை சீனா பகிர்ந்து கொள்ள வேண்டும்: உலக சுகாதார அமைப்பு நெருக்கடி!!
கொரோனா தொற்று பாதிப்பு குறித்த உண்மையான தரவுகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளுமாறு சீனாவை உலக சுகாதார அமைப்பு நெருக்கடி தந்துள்ளது. சீன அரசு பூஜ்ய கொரோனா கொள்கையை தளர்த்திய பின்னர் மீண்டும் அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே, தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடுவதை சீனா நிறுத்தி உள்ளது. இதனால் பாதிப்பு, பலி குறித்த எந்த தகவலும் வெளி உலகுக்கு தெரியாமல் மறைத்து வருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் குழு சீன பிரதிநிதிகளை சந்தித்தனர். அப்போது கொரோனா பாதிப்புகள், தடுப்பூசி, சிகிக்சை உள்ளிட்டவை குறித்து சீன அதிகாரிகளிடையே விரிவாக விவாதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையில், ‘கொரோனா பாதிப்பு தொடர்பான துல்லியமான தரவுகளை வெளியிடுவதில் சீனா வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அந்த தகவலை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். வைரசின் மரபணு வரிசை முறை, மருத்துவமனையில் அனுமதித்தல், ஐசியூ பிரிவில் சேர்த்தல், இறப்புக்கள் மற்றும் போடப்பட்ட தடுப்பூசிகள், தடுப்பூசி இருப்பு, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள், 60வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்ட நிகழ்நேர தரவுகளை சீனா பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தொற்று பாதிப்பில் உள்ளவர்கள் கடுமையான நோய் மற்றும் இறப்பில் இருந்து பாதுகாப்பதற்கு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி அவசியமாகும். 3ம் தேதி சார்ஸ்-கோவிட்-2 வைரஸ் குறித்த தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டத்தில் வைரஸ் மரபணு வரிசை முறை குறித்த விரிவான தகவல்களை சீன விஞ்ஞானிகள் வழங்குவதற்கு முன்வர வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
சவாலை சமாளிப்போம் அதிபர் ஜின்பிங் உரை
இதற்கிடையே, ஆங்கில புத்தாண்டையொட்டி, சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் அவர், ‘‘கொரோனா பரவல் காரணமாக சீனாவுக்கு இந்த புத்தாண்டில் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. இதுவரை இல்லாத பிரச்னைகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த கடினமான சவால்களை சமாளித்து பயணிப்பது எளிதான விஷயமல்ல” என்று கூறினார்.