வெளிநாடொன்றில் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்ட கோடிக்கணக்கான பணம்!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் பணிபுரிந்து வரும் இந்தியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விநோதமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அவரது வங்கிக் கணக்கில் 5,70,000 திர்ஹம் (இந்திய மதிப்பில் ரூ.1.28 கோடி)வைப்பு செய்யப்பட்டுள்ளது.இதனை பார்த்த அவர் மிகுந்த சந்தோஷத்தில் இருந்திருக்கிறார்.
இதுகுறித்து காவல்துறைக்கோ, வங்கி கிளைக்கோ தகவல் கொடுக்காமல் அதனை செலவும் செய்திருக்கிறார்.
இதனிடையே, அமீரகத்தில் இயங்கிவரும் மருத்துவ வர்த்தக நிறுவனம் ஒன்று தங்களுடைய வாடிக்கையாளர் ஒருவருக்கு 5,70,000 திர்ஹம் பணத்தை அனுப்பியிருக்கிறது. அப்போது, தவறுதலான வங்கி இலக்கத்தை உள்ளீடு செய்ய பணம் வேறு ஒரு நபருக்கு சென்றிருக்கிறது.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட நபரை வங்கி உதவியுடன் தொடர்பு கொண்டிருக்கிறது அந்த நிறுவனம். அப்போது, தவறுதலாக பணம் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அதனை திருப்பி கொடுக்கும்படியும் நிறுவன அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர்.
ஆனால், அந்த இந்திய நபர் பணத்தை திரும்பி கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அந்நிறுவனம் துபாயின் அல் ரஃபா காவல் நிலையத்தில் புகாரளிக்க, அவரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இருப்பினும் பணத்தை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து துபாய் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, அந்த இந்தியர்,”என்னுடைய வங்கி கணக்கில் 5,70,000 திர்ஹம் தொகை கிரெடிட் ஆனது. இதனால் நான் மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளானேன். அந்த தொகையை எனது வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கு பயன்படுத்திக்கொண்டேன். ஒரு நிறுவனம் அந்த தொகையை திரும்ப கேட்டது. அது அவர்களுடைய பணம் தானா? என்பது தெரியாததால் நான் கொடுக்க மறுத்துவிட்டேன்” எனக் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து இந்தியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம், அவருடைய வங்கி கணக்கில் கிரெடிட் ஆன தொகையை அபராதமாக செலுத்தும்படியும் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், அந்நபர் இது தொடர்பாக மேல்முறையீட்டுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.