ஜனாதிபதி மாளிகையில் 39 ஓவியங்கள் மாயம் !!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கடந்த வருடம் ஜூலை 9ஆம் திகதி நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து, ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த பின்னர், அங்கிருந்த 39 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் காணாமல் போயுள்ளன.
தொல்பொருள் திணைக்களத்தின் பல குழுக்கள் மேற்கொண்ட தொடர் விசாரணைகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட பின்னர் காணாமல் போன கலாச்சார மற்றும் வரலாற்று பொருட்களை அடையாளம் காண தொல்பொருள் திணைக்களம் விசாரணை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சிலரின் செயற்பாடுகளினால் அங்குள்ள ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் உள்ள 209 ஓவியங்களை பாதுகாப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர் ஓவியங்கள் மற்றும் அதன் நிலையை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.