எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாரு?”.. இதுக்கு போய் இத்தனை லட்சம் செலவா? அதிர வைத்த இளைஞர்!
ஜப்பான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை உண்மையான ஓநாயை போல மாற்றிக்கொள்ள வேண்டும் என்று லட்சக்கணக்கான பணம் செலவு செய்து ஒரு ஸ்பெஷல் உடையை வாங்கி இருக்கிறார்.
சிறு வயதிலிருந்து விலங்குகள் மீது அளப்பறிய ஆர்வம் கொண்டிருக்கும் இந்த நபர் ஏராளமான காட்டு விலங்குகளிடம் நெருங்கி பழகியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த விலங்குகளில் ஒன்றாக தானும் மாறிவிட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்திருக்கிறார். அப்படி வந்த யோசனைதான் ஓநாய் உடை. இவருக்கு காட்டு விலங்குகளிலேயே மிகவும் பிடித்தது ஓநாய்தானாம். எனவேதான் ஓநாய் போன்று உடை அணிய வேண்டும் என்று யோசித்திருக்கிறார்.
ஆனால் என்னதான் ஓநாய் போன்று வேடமிட்டாலும் அவருக்கு இந்த உடைகள் திருப்தியை கொடுக்கவில்லை. எனவே சரியான உடையை தேர்ந்தெடுக்க முயன்றிருக்கிறார். அப்படி இவர் தேடி போகும் போது கிடைத்த நிறுவனம்தான் ‘செப்பெட்’. இந்த நிறுவனத்தில் என்ன வித்தியாசம் என்றால் இதுபோன்ற ஸ்பெஷலான உடையை தயாரித்து கொடுப்பதையே செப்பெட் நிறுவனம் முழு நேர பணியாக செய்து வருகிறது என்பதுதான்.
சிறப்பான உடை
எனவே இவருக்கு ஏற்ப ஒரு சிறப்பான உடையை தயாரிக்க களத்தில் இறங்கி இருக்கிறது செப்பெட் நிறுவனம். இது குறித்து அந்நிறுவனம் கூறியிருப்பதாவது, ‘இவ்வாறு சிறப்பான உடையை தயாரிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. முதல் விஷயம் இந்த உடையை அணிந்திருப்பவர்கள் எந்த நேரத்திலும் இதிலிருந்து வெளியேறும்படி உடை இருக்க வேண்டும்.
ஏனெனில் தலை முதல் பாதம் வரை இந்த உடை மூடியிருப்பதால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. ஒருவேளை மூச்சு திணறல் ஏற்படுகிறது என்றால் அதனை வெளியில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு
அவ்வாறு தெரியப்படுத்தப்பட்டாலும் கூட அதனை அருகில் இருப்பவர்கள் புரிந்துக்கொண்டு இவர்களை இந்த உடையிலிருந்து மீட்க வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் போதிய நேரம் வேண்டும். எனவே நாங்கள் தயாரித்துள்ள இந்த உடையில் சிறந்த காற்றோட்டத்தை உறுதி செய்துள்ளோம். மட்டுமல்லாது இந்த உடையை அணிந்திருப்பவரே நினைத்தவுடன் இதிலிருந்து வெளியில் வந்துவிடலாம். அந்த அளவுக்கு எளிமையாக வடிவமைத்துள்ளோம்.
மேலும், இந்த உடையை அணிந்துக்கொண்டு உண்மையான ஓநாய் அருகில் சென்று நின்றால் எது நிஜம், எது போலி என்றே உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு நேர்த்தியாக இருக்கும்.
50 நாட்கள்
இது போன்று வேறு எவராலும் மற்றொரு உடையை வடிவமைக்கவே முடியாது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் இதனை முழுமையாக வடிவமைக்க எங்களுக்கு சுமார் 50 நாட்கள் வரை தேவைப்பட்டது. இது நிஜமான ஓநாயை போல இருக்க வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான ஓநாய்களின் படங்களை பல முறை உன்னிப்பாக பார்த்து அதனை உள்வாங்கி இதுபோல வடிவமைத்திருக்கிறோம். இதற்காக சில ஓநாய்களை நேரிலேயே போய் பார்த்திருக்கிறோம். இது தவிர இறந்து போன ஓநாயின் உடலில் உள்ள எலும்பு மட்டும் நக அமைப்பையும் கவனித்து இந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளனர்.
உடை
ஒரு வழியாக 50 நாட்களுக்கு பிறகு இந்த உடையை அணிந்து பார்த்த வாடிக்கையாளர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இது தன்னுடைய சிறு வயது கனவு என்றும், இந்த கனவு இப்போதுதான் நிஜமாகியுள்ளது என்றும் கூறியுள்ளார். சரி இதெல்லாம் போகட்டும் இதற்கு எவ்வளவு செலவாகியுள்ளது என்று கேட்கிறீர்களா? இதற்காக சுமார் 3,000,000 யென் செலவிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 18.5 லட்சமாகும்.