சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் மீண்டும் கோரச் சம்பவம்.. 3 பெண்கள் பரிதாப பலி.. நடந்தது என்ன?
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, டிசம்பர் 29ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 நாட்களுக்கு முன்னர் தான் இதுபோன்ற கோர நிகழ்வு நடைபெற்று 8 பேர் பலியான நிலையில் தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரபாபு நாயுடு
சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். சந்திரபாபு நாயுடு சிலருக்கு சேலைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
3 பெண்கள் பரிதாப பலி
பின்னர் அங்கு சேலை வாங்குவதில் பெண்களிடையே போட்டி நிலவியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் முண்டியடித்துக் கொண்டு மேடையை நோக்கி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். இதில் கால்களில் மிதிபட்டு 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு முன்
இதேபோல் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 29ஆம் தேதி நெல்லூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் சந்திர பாபு நாயுடு. கந்துகூரு என்டிஆர் சர்க்கிள் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றார். சந்திரபாபு நாயுடுவின் பேச்சை கேட்க ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர். சந்திரபாபு நாயுடு வாகனத்தின் பின்னால் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் பொதுக்கூட்ட மேடை அருகே வாகன நிறுத்துமிடத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தன.
அடுத்தடுத்து – கோர சம்பவம்
ஆனால் அதே இடத்தில் சாலையின் இருபுறமும் மோட்டார் பைக்குகள் ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய 2 பெண்கள் உட்பட 8 தொண்டர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். ஆந்திர அரசு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்காத காரணத்தாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறியதாலும் தான் இந்த விபத்து நடந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மீண்டும் சந்திர பாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பெண்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.