“கேட்டுச்சா”.. ராமரும், அனுமனும் பாஜக கட்சிக்காரர்கள் கிடையாது.. “சேம்சைட்” கோல் போட்ட உமாபாரதி!!
மற்றவர்கள் யாரும் ராமர், அனுமனின் பக்தர்களாக இருக்க முடியாது என்ற தவறான கருத்தை பாஜக கொண்டிருக்கக் கூடாது என்று உமா பாரதி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை கூட்டி வருகிறது.
பாஜக எம்பி பிரக்யா எப்படியோ, அதுபோலவே உமாபாரதியும், எதையாவது பேசி சர்ச்சையை கூட்டுபவர்.. பலர் பேசியே சர்ச்சையை சிக்குவார்கள் என்றால், அந்த சர்ச்சைக்கு கருத்து சொல்லியே இன்னொரு கருத்தை சொல்லி பரபரப்பை கூட்டிவிடுவார்.
2 நாளைக்கு முன்புதான் பிரக்யா பேசும்போது, “காய்கறி வெட்டும் கத்தியாவது வைத்துக்கொள்ளுங்கள். கத்தியை கூர் செய்துகொள்ளுங்கள். யாரேனும் வீட்டிற்குள் புகுந்தால் அவர்களை தாக்குங்கள்” என்று பேசி, அந்த விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை புகாராக போய்விட்டது.
கத்தி கத்தி
பிரக்யாவின் இந்த கருத்துக்கு உமா பாரதி வரவேற்பு தெரிவித்திருந்தார்.. ‘ஷிவமொக்காவில் இந்துத்துவாதிகள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்… அதனால்தான், இந்துக்களை ஆயுதங்களை வைத்திருக்குமாறு பிரக்யா சிங் சொல்லியிருக்கிறார்.. பிரக்யா சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? ராமப்பிரான் கூட தன்னுடைய பட்டத்தை துறந்து வனவாசம் புறப்பட்ட போது கூட, கடைசி வரை ஆயுதத்தை வைத்திருப்பேன் என்று உறுதியேற்றார்… ஆயுதங்கள் வைத்துக் கொள்வதில்லை தவறு இல்லை. ஆனால், வன்முறை எண்ணம் கொண்டிருப்பதே தவறு’ என்று கூறியிருந்தார் உமாபாரதி.
கடவுள்இந்துமதம்
உமாபாரதியை பொறுத்தவரை, கிட்டத்தட்ட, சுப்பிரமணிய சாமி போலத்தான், சொந்த கட்சியையே பலமுறை தாக்கி பேசிவிடுவார்.. இப்போதும் அப்படிதான் பேசியிருக்கிறார். ஒரு அறிக்கையையும் இப்போது வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடவுள் ராமர், இந்துமதம் ஆகியவை பாஜகவுக்கு மட்டும் உரிமையானது கிடையாது, காப்பி ரைட்ஸ் எதுவும் பெறவில்லை என்று உமா பாரதி தெரிவித்துள்ளார்… அந்த அறிக்கை இதுதான்: ‘இந்துமதம், இந்துத்துவா மற்றும் கடவுள் ராமர் ஆகியவற்றுக்கு பாஜக காப்புரிமை எதுவும் பெறவில்லை.. அது பாஜகவுக்கு மட்டும் சொந்தமானதோ, உரிமையானதோ கிடையாது.. கடவுள் ராமர், அனுமன், இந்து மதத்தின் மீது யார் வேண்டுமானாலும் பற்று வைக்கலாம், நம்பிக்கை கொள்ளலாம்.
வித்தியாசம்
ஆனால் வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் வைத்திருக்கும், எங்கள் கட்சி வைத்திருக்கும் நம்பிக்கை அரசியல் ஆதாயம் கடந்தது. ராமர், தேசியக் கொடி, கங்கை நதி, பசு ஆகியவை மீது எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது பாஜக கிடையாது.. இது இயல்பாகவே எனக்குள் ஏற்கனவே இருக்கிறது. கடவுள் ராமர், அனுமன், இந்து மதத்தை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம், நம்பிக்கை வைக்கலாம். இவற்றுக்கு பாஜக ஏதும் காப்புரிமை பெறவில்லை. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதுவை தடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். பாஜக என்ன கட்டளையிடுகிறதோ, என்ன கோடு போடுகிறதோ, அதை மட்டுமே செய்வேன்.
காங்கிரஸ்ராகுல் ப்ளான்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் என்ன? இந்த பாரத தேசம் சிதறுண்டு கிடக்கிறதா? பாரதம் எங்கே உடைகிறது? நாங்கள் 370 வது பிரிவை (ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக) ரத்து செய்துள்ளோம். நாட்டை உடைத்தது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இதை ராகுல் காந்தி கையில் எடுக்க வேண்டும். அவர் PoK க்கு யாத்திரை செல்ல வேண்டும்.. 2023-ம் ஆண்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும்.. உண்மையிலேயே காங்கிரஸ் இந்தியாவை ஒருங்கிணைக்க விரும்பினால், பிரிவினைக்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பகுதிகளை இணைப்பது பற்றிப் பேச வேண்டும்’ என்றார்.