;
Athirady Tamil News

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு… அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

0

சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது. சீனாவில் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட நிலையில், ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டது போன்ற வீடியோக்களும் வெளிவந்து திடுக்கிட செய்தன. தினமும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீன பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் விதித்துள்ளன. கனடாவும் இந்த முடிவை பின்பற்ற முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து வரும் சர்வதேச விமான பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான தொற்றில்லா சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவும் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளது. இதன்படி, சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் கொரோனா தொற்றில்லா சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை வருகிற ஜனவரி 5-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்க குடிமக்கள் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும் அறிவுறுத்தி உள்ளன.

இதுபற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சீன மக்கள் குடியரசில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவில் அதன் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சீனாவிடம் இருந்து, தொற்றியல் மற்றும் வைரசின் மரபணு தொடர் பற்றிய போதிய தகவல்கள் கிடைக்க பெறாமலும், வெளிப்படையற்ற தன்மையாலும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என தெரிவித்து உள்ளது. சீனா தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிட போவதில்லை என அறிவித்த போதிலும், நாள்தோறும் 9 ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர் என்று கசிந்த அதிர்ச்சி தகவலை தொடர்ந்து, அமெரிக்கா இந்த முடிவை அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.