டெல்லியில் முதல் முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மருத்துவமனை!!
டெல்லியில் அஜ்மீரி கேட் பகுதியில் இருந்து லஹோரி கேட் பகுதி வரை செல்ல கூடியது ஜி.பி. சாலை அல்லது கார்ஸ்டின் பேஸ்டன் சாலை. இந்த பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படும் இந்த பகுதியில் புது வருட தொடக்க நாளான இன்று முதன்முறையாக சேவா பாரதி என்ற என்.ஜி.ஓ. சார்பில் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக சுகாதார கிளினிக் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி பாலியல் தொழிலாளியான ஷாலினி (பெயர் மாற்றம்) என்பவர் கூறும்போது, நகரின் பிற பகுதிகளில் உள்ள கிளினிக்குகளுக்கு செல்லும்போது, எதிர்கொள்ளும் சமூக அவலத்தில் இருந்து எதிர்த்து போராட இந்த கிளினிக் உதவும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
நாங்கள் பாலியல் தொழிலாளர்கள் என தெரிந்ததும் டாக்டர்கள் கூட வேறு வகையில் எங்களிடம் அணுகினர். எங்களை போன்றவர்களுக்கான இந்த கிளினிக் அந்நிலைமையை மாற்றும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கிளினிக்கில் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மருத்துவ வசதிகளை பெற முடியும்.
இதில் 7 மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். சமூகத்தில் தனித்து விடப்பட்ட மற்றும் சுரண்டலுக்கு ஆளான இவர்களின் நலனுக்காக புது வருடத்தின் முதல் நாளில் நாங்கள் இதனை தொடங்கி உள்ளோம் என சேவா பாரதி அமைப்பின் பொது செயலாளர் சுஷில் குப்தா கூறியுள்ளார்.