புத்த மதத்தை அழிக்க சீன அரசு முயற்சிக்கிறது: தலாய் லாமா குற்றச்சாட்டு!!
புத்த மதத்தை அழிக்க சீன கம்யூனிஸ்ட் அரசு முயற்சிக்கிறது என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 1949-ம் ஆண்டில் திபெத்தை சீன ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் பிறகு கடந்த 1959-ம் ஆண்டு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் அவரது ஆதரவாளர்களும் சீன ராணுவத்தின் பிடியில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அப்போது முதல் இந்தியாவின் இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் தலாய் லாமா வாழ்ந்து வருகிறார்.
வருடாந்திர ஆன்மிக பயணமாக பிஹாரின் புத்த கயாவுக்கு தற்போது வருகை தந்துள்ள தலாய் லாமா நேற்று முன்தினம் பேசியதாவது.
இமாலய மலைப்பிரதேச நாடுகளில் புத்த மதம் வியாபித்து பரவியுள்ளது. குறிப்பாக சீனா, மங்கோலியாவில் புத்த மதம் செழித்து வளர்ந்துள்ளது. ஆனால் புத்த மதத்தை சீன கம்யூனிஸ்ட் அரசு விஷமாக கருதுகிறது. புத்த மதத்தை அழிக்க தீவிர முயற்சி செய்கிறது. ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
திபெத் மற்றும் சீனாவில் பல்வேறு புத்த மடாலயங்களை சீன அரசு அழித்திருக்கிறது. இதுபோன்று பல்வேறு வகைகளில் முயற்சி செய்தும் புத்த மதம் இன்றும் வலுவாக உள்ளது. சீனாவில் வசிக்கும் மக்கள் புத்த மதத்தை உறுதியுடன் பின்பற்றுகின்றனர்.
பனி பூமி என்று அழைக்கப்படும் திபெத் பல்வேறு துயரங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனினும் இதுவும் ஒருவகையான ஆசீர்வாதம் என்றே கருதுகிறேன். திபெத்தின் துயரம் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் திபெத் புத்த மதத்தை பற்றி அறிந்து கொண்டிருக்கிறது. சீனாவில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எதிர்கால உலகம் ஒளிமயமாக அமைய வேண்டும். இவ்வாறு தலாய் லாமா பேசினார்.