பிஹாரின் கயா மாநகராட்சி தேர்தலில் துப்புரவு பெண் தொழிலாளி துணை மேயராக தேர்வு!!
சுமார் 40 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய சிந்தா தேவி (62) பிஹாரின் கயா மாநகராட்சியின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிஹார் மாநில உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 18, 28 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. 17 மாநகராட்சிகள், 70 நகராட்சிகள், 137 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த 30-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பிஹாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மெகா கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கும் பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது.
மொத்தமுள்ள 17 மாநகராட்சிகளில் மெகா கூட்டணி, பாஜக தலா 6 மாநகராட்சிகளைக் கைப்பற்றி உள்ளன. இதேபோல நகராட்சி, ஊராட்சிகளிலும் ஆளும் கூட்டணிக்கு இணையாக பாஜக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது ஆளும் கூட்டணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பிஹார் உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு சுவாரசியமான முடிவுகள் வெளியாகி உள்ளன.
சப்ரா மாநகராட்சியில் பிரபல மாடல் ராக்கி குப்தா மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேட்டியா மாநகராட்சியில் போஜ்புரி நடிகை அக்சரா சிங்கின் ஆதரவு பெற்ற கரிமா தேவி மேயராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
பிஹாரின் கயா மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளி சிந்தா தேவிதுணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கயா மாநகராட்சியில் சுமார் 40 ஆண்டுகள் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய சிந்தா தேவி கடந்த 2020-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பின்னர் அங்குள்ள சந்தையில் காய்கனி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். 3 மகன்களும் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கயா மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு மொத்தம் 11 பேர் போட்டியிட்ட நிலையில் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்தசிந்தா தேவி வெற்றி பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூறும்போது, “கடந்த 40 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி உள்ளேன். எனக்கு எழுத, படிக்க தெரியாது. ஆனால் மக்களின் துன்பங்கள், துயரங்கள் தெரியும். அவர்களுக்காக அயராது பணியாற்றுவேன். எப்போதும் போல நடந்தே அலுவலகத்துக்கு சென்று மக்களுக்கு சேவையாற்றுவேன்” என்று தெரிவித்தார்.