;
Athirady Tamil News

தாலிபன்களின் கல்வி தடையை எதிர்த்து தனி ஆளாகப் போராடும் 18 வயது பெண்!!

0

என்னுடைய கோரிக்கை நீதிக்கானது என்பதால் எனக்கு அச்சம் ஏதுமில்லை,” என்கிறார் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 18 வயது இளம் பெண்.
தாலிபன் ஆட்சியாளர்கள் பெண்களின் உயர் கல்விக்கு எதிராக விதித்துள்ள தடையால், பட்டம் பெற வேண்டும் என்ற அந்த இளம் பெண்ணின் லட்சியம் வெற்றி பெறவில்லை.

இந்த தடையால் தனக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்று ஏற்பட்ட கோபத்தால் போராடும் அந்த இளம் பெண்ணின் பாதுகாப்பு கருதி அவரது பெயரை நாங்கள் மாற்றி குறிப்பிட்டிருக்கின்றோம். அசாதாரணமான முறையில் தனி ஒரு ஆளாக காபூல் பல்கலைக்கழகத்தின் முன்பு குர்ஆனிலிருந்து மேற்கோள் காட்டிய வார்த்தைகளோடு அவர் போராடினார்.

தனி நபர் போராட்டம்
டிசம்பர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அடேலா, தனது பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பு ‘படி’ எனப் பொருள்படும் அரேபிய வார்த்தை எழுதப்பட்ட ஒரு பதாகையைப் பிடித்தபடி நின்றிருந்தார். முஹம்மது நபிக்கு கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட முதல் வார்த்தை இதுதான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

“கல்விக்கான உரிமையை கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கின்றார். நாம் கடவுளுக்கு பயப்பட வேண்டிய தேவை இருக்கிறது. தாலிபன்களை கண்டு பயப்படத் தேவையில்லை. அவர்கள் எங்கள் உரிமைகளைப் பறிக்க விரும்புகின்றனர்,” என பிபிசி ஆப்கன் சேவையிடம் அவர் கூறினார்.

தாலிபன்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை அவர்கள் மோசமாக நடத்துவார்கள் என்பது தெரியும். அவர்கள் போராடுபவர்களை அடிப்பார்கள், தாக்குவார்கள், ஆயுதங்களை உபயோகிப்பார்கள், போராடுபவர்களைத் தற்காலிகமாக முடக்கும் வகையில் டேசர் எனும் ஆயுதத்தை உபயோகிப்பார்கள், சக்தி வாய்ந்த முறையில் தண்ணீரைப் பீச்சியடிக்கவும் செய்வார்கள். இருந்தும் அவர்கள் முன்னால் நின்றிருந்தேன்.

முதலில் என்னை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. பின்னர், துப்பாக்கி ஏந்திய ஒரு நபர், இங்கிருந்து செல், என்று எச்சரித்தார்.
ஆரம்பத்தில் அடேலா அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார்.
பல்கலைக்கழகத்தின் முன்பு விடாப்பிடியாக நின்றிருந்தார். அவர் பிடித்திருந்த பதாகையில் எழுதப்பட்ட வாசகம் அவரைச் சுற்றி நின்றிருந்த ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களின் கவனத்தை ஈர்த்தது. பதாகையை கையில் ஏந்தியபடி நின்ற அவர், ஒரு தாலிபன் உடன் உரையாடினார்.

நான் என்ன எழுதியிருக்கின்றேன்? என்று உங்களால் படிக்க முடிகிறதா?’ என அவரிடம் கேட்டேன்.”

அதற்கு அந்தப் பாதுகாவலர் ஒன்றும் சொல்லவில்லை. அடேலா மேலும் அவரிடம், “உங்களால் கடவுளுடைய வார்த்தையைப் படிக்க முடியவில்லையா?” என கேட்டார். “அதன்பின்னர் அவர் கோபம் அடைந்து விட்டார், என்னை அச்சுறுத்தினார்.”

அந்த இளம் பெண் கையில் பிடித்திருந்த பதாகையைப் பிடுங்கிச் சென்றுவிட்டனர். தனி நபர் போராட்டத்தில் இருந்து 15 நிமிடங்களில் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அந்த இளம் பெண் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய மூத்த சகோதரி டாக்சி ஒன்றில் அமர்ந்தபடி அந்தப் போராட்டத்தை படம் பிடித்துக் கொண்டும், வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தார்.
“இதனால் அந்த டாக்சி டிரைவர் தாலிபன்களை நினைத்து மிகவும் பயந்து போனார். தயவு செய்து படம் எடுக்க வேண்டாம் என என்னுடைய சகோதரியிடம் அவர் கெஞ்சினார். பிரச்னை வந்துவிடும் என அஞ்சினார். காரில் இருந்து வெளியேறுங்கள் என்றும் சொன்னார்,” என்றார் அடேலா.

பெண்கள் மீது அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைகள் அவசரமாக வெளியேறியதைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்தது.

பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பதை முதலில் தாலிபன்கள் தடை செய்தனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்கள் சில பாடங்களைப் படிப்பதற்குத் தடை விதித்தனர். அவர்கள் தங்கள் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று அவர்களிடம் கூறினர்.

டிசம்பர் 20ஆம் தேதி பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்வதற்குத் தடை விதித்தனர். சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்தன. பின்னர் சில நாட்களுக்குப் பிறகு உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதைத் தடை செய்தனர்.

கல்வி தடைச்சட்டத்திற்கு எதிராகப் பெண்கள், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் அன்றிலிருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானில் சமீபத்திய ஆர்ப்பாட்டங்களால் பிரபலப்படுத்தப்பட்ட “பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்” என்ற முழக்கத்தை சிலர் பயன்படுத்தியுள்ளனர்.
காபூல் பல்கலைக்கழகத்தில் தற்போது நான்கு கலைப் பிரிவுகள் பெண்களின் தலைமையில் உள்ளன. பெண் பேராசிரியர்கள் இப்போது வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று பிபிசியிடம் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறினார்.

ஆண்களுக்கு அழைப்பு
அடேலா போன்ற பெண்களுக்கு தாலிபன்களை எதிர்த்துப் போராடுவது என்பது எளிதான காரியம் அல்ல. எனவே ஆண்கள் இதைப் போன்ற ஊக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆனால், இதனால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படக்கூடும்.
“என்னுடைய போராட்டத்தின் போது, ஓர் இளைஞர் எனக்கு ஆதரவாக வீடியோ எடுக்க விரும்பினார். ஆனால், அவரை தாலிபன் பாதுகாவலர்கள் கடுமையாகத் தாக்கினர்,” என்றார் அவர்.

ஆண் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக தொலைகாட்சி நேரலை நிகழ்வில் தன்னுடைய பட்டய கல்வி சான்றிதழை கிழித்துப் போட்டார். 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகத் தங்களது வேலையை ராஜினாமா செய்திருப்பதாக பிபிசியின் கவனத்துக்குத் தெரிய வந்தது.

வேலையை ராஜினாமா செய்த ஆசிரியர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், தாலிபன்கள் தன்னைத் தாக்கியதால் மீண்டும் வேலையில் சேர்ந்து விட்டதாகக் கூறினார். ஆனால் ஆப்கானிஸ்தான் ஆண்கள் போராட்டத்தில் இணைவது முக்கியம் என்று அடேலா நம்புகிறார்.

“இப்போதைக்கு வெகு சில ஆப்கானிஸ்தான் ஆண்கள் மட்டுமே எங்களுடன் துணை நிற்கின்றனர். ஈரானில் உள்ள ஆண்கள் தங்களுடைய சகோதரிகளுக்கு துணை நிற்கின்றனர். பெண்கள் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். கல்வி உரிமைக்கு ஆதரவாக நாமும் ஒன்றிணைந்து நின்றால் நாமும் 100 சதவிகிதம் வெற்றி பெற முடியும்,” என்றார் அவர்.

தொடரும் எதிர்ப்பு
அதேபோல, தாலிபன்களுக்கு வெளியில் இருந்து அழுத்தங்களும் வருகின்றன. கடந்த செவ்வாய்கிழமையன்று ஐநா பாதுகாப்பு சபை கவுன்சில், “சிறுமிகள், பெண்களை கல்வி கற்பதில் இருந்து தடை செய்வது, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை சீர்குலைக்கிறது,” எனக் கூறியுள்ளது.

ஆனால், தாலிபன் தலைவர்கள் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கின்றனர். கார்டியனிடம் பேசிய ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சர் நிடா முகமது நடிம், “எங்கள் மீது அணு குண்டு வீசினாலும் கூட, இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படமாட்டாது,” என்றார்.

அடேலாவின் உறுதி
“என்னால் பறக்க முடியாவிட்டால் ஓடுவேன். ஓட முடியாவிட்டால் மெதுவான அடி எடுத்து வைப்பேன். அதுவும் முடியவில்லை என்றால் ஊர்ந்து செல்வேன். ஆனால் எனது போராட்டத்தை, எனது எதிர்ப்பை நிறுத்த மாட்டேன்,” என உறுதியுடன் கூறினார்.

தன்னுடைய நண்பர்களின் ஆதரவையும் பாராட்டையும் அவர் பெற்று வருகிறார். “நீங்கள் மிகவும் தைரியமானவர், நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்” என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
முந்தைய தலைமுறைகளை விட இன்று ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் இந்த போராட்டத்தில் வெற்றி பெறச் சிறந்தவர்கள் என்று அடேலா நம்புகிறார்.

20 ஆண்டுகளுக்கு முந்தைய இருண்ட காலத்துக்கு நாங்கள் செல்ல விரும்பவில்லை, அந்தக் கால பெண்களை விட நாங்கள் தைரியமாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் அதிகம் படித்தவர்கள், எங்கள் உரிமைகளை அறிந்தவர்கள்,” என்று அடேலா உறுதிபடக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.