பனிப்புயலை தொடர்ந்து அமெரிக்காவில் கனமழை- வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது!!
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இந்த பனிப்புயலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
இந்த சோகம் மறைவதற்குள் தற்போது அமெரிக்காவில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கன மழையால் ரோடுகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. பனிப்புயலை தொடர்ந்து தற்போது பெய்யும் மழை அமெரிக்காவை புரட்டி போட்டு உள்ளது.