வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி அறிவிப்பு!!
சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் உள்ள சுரக்ஷா விடுதியில் தங்கியுள்ள இலங்கைப் பெண்களை நாடு திரும்பும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி முதல் 8 பெண்களைக் கொண்ட குழு இலங்கை வந்தடைந்ததாகவும், மேலும் 6 பெண்கள் இன்று (02) இலங்கைக்கு வரவுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
தூதரகத்தால் பணியகத்தில் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படாத சுற்றுலா வீசாக்களுடன் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற 18 பேர் சிக்கித் தவிப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் பணிபுரிந்த பணியிடத்தில் இருந்து தப்பிச் சென்றதால் அவர்களது பெயர்களும் தொழிலாளர் அமைச்சகத்தால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே, அவர்களை அந்தந்த முதலாளிகளின் அனுமதியுடன் இலங்கைக்கு அழைத்துவர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ளவர்கள் குழுவாக இருப்பதால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வருவதற்கு விமான டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.