2022-ல் பாகிஸ்தானின் 22 மீனவர்களை கைது செய்துள்ளோம்: எல்லை பாதுகாப்புப் படை!!
2022-ல் பாகிஸ்தான் மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களின் 79 படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை பாதுகாத்து வரும் எல்லை பாதுகாப்புப் படை பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2022-ல் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஹெராயின் போதைப் பொருள் பாக்கெட்டுக்களும், ரூ. 2.49 கோடி மதிப்புள்ள 61 கஞ்சா பாக்கெட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குஜராத் எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
எல்லையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 22 இந்தியர்கள், 4 பாகிஸ்தானியர்கள், 2 பங்களாதேஷ் நாட்டவர்கள், 2 கனடா நாட்டவர்கள், ஒரு ரோகிங்கியா ஆகியோரை கைது செய்துள்ளதாகவும் குஜராத் எல்லை பாதுகாப்புப் படைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய – பாகிஸ்தான் எல்லை 7 ஆயிரத்து 419 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இதில், ராஜஸ்தானின் பார்மர் முதல் ராணா கட்ச் பகுதி வரையிலான 826 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட எல்லைப் பகுதியை குஜராத் எல்லை பாதுகாப்புப் படை பிரிவு பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.