;
Athirady Tamil News

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் சரியே. ஆனால்…” – மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.வி.நாகரத்னா!!

0

மத்திய அரசு 2016-ம் ஆண்டு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் சரியானது என்றாலும், அதை செயல்படுத்திய விதம் சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் மாறுபட்ட தீர்ப்பை அவர் வழங்கினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 58 வழக்குகளை நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த வழக்கில் குளிர்கால விடுமுறைக்கு முன்பாகவே விசாரணை முடிந்து விட்ட நிலையில், விடுமுறை முடிந்து வந்த முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 நீதிபதிகளில் 4:1 என்ற பெரும்பான்மையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியே என்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்து. நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், “எனது கண்ணோட்டத்தில் நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது. 2016-ம் ஆண்டு இருந்த நிலையை இப்போது திரும்பக் கொண்டுவர முடியாது. ஆனாலும், அந்த நடவடிக்கை சட்டத்திற்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம். அதனால் அது சட்டத்திற்கு விரோதமானது. அந்த நடவடிக்கை செயல்முறை படுத்தப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது.

சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நல்ல நோக்கத்திற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் சிறந்த எண்ணம், நல்ல நோக்கம் இங்கே கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளே இங்கு மதிப்பிடப்படுகின்றனவே தவிர, அதன் நோக்கம் இல்லை. கருப்பு பணம், பயங்கரவாத நிதி, கள்ள நோட்டு புழக்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நல்ல செயலும் நல்ல எண்ணமும் ஆகும்.

மனுதாரர்களின் வாதம் இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி, பணமதிப்பிழத்தலுக்கான நடவடிக்கை ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவால் எடுக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் இந்த வழக்கில் அப்படி ஒரு பரிந்துரை வழங்கும்படி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நவம்பர் 7-ம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி பார்க்கும்போது, இது மத்திய அரசின் விரும்பமே. இந்த நடவடிக்கையில் ஆர்பிஐ-யின் சுதந்திரமான மனநிலை வெளிப்பட்டவில்லை.

முந்தைய நடவடிக்கைகளைப் போலவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டப்படியே நடந்திருக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தின் அறிக்கை மூலமாக இல்லை” என்று நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்திருந்தார்.

முக்கிய கருத்துகள்: முன்னதாக, இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் வாதிடுகையில், “கள்ள நோட்டுக்கள், கருப்பு பணத்தை கட்டுப்படுத்த வேறு வழிகள் குறித்து மத்திய அரசு ஆராயவில்லை. சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் தொடர்பாக மத்திய அரசு தன்னிச்சையாக எந்த முடிவுகளுயும் எடுக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் பரிந்துரைகளை மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். மேலும், நவ.7 ம் தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் கடிதம் உள்ளிட்ட பணமதிப்பிழத்தல் நடவடிக்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்ட கூட்டத்தின் முக்கிய ஆவணங்கள், அந்த கூட்ட நடவடிக்கை குறிப்புகள் ஆகியவற்றை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது” என்று வாதிட்டார்.

வங்கிகளின் குழு தனது வாதத்தில், “பொருளாதார கொள்கை முடிவுகள் குறித்து நீதிமன்றம் விமர்சனம் செய்ய முடியாது என்று தெரிவித்தது. அதற்கு, பொருளாதார கொள்கை முடிவு என்பதால் அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது” என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில், “நாட்டின் வளர்ச்சிக்கான நடைமுறையில், ஒரு இடைக்கால சிரமம் இருக்கத்தான் செய்தது. அந்த பிரச்சினை தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் சரி செய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்திருந்தது.

இந்த பணமதிப்பிழத்தல் நடவடிக்கை அரசாங்கத்தின் தோல்வி என்றும், இந்த நடவடிக்கை நாட்டின் வணிகத்தை அழித்து, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 பேர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தனர்; நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பும் வழங்கினார். இதனால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான 58 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.