வெறும் 1,600 இடங்களுக்கு.. 30000 பேர் தேர்வெழுதிய அவலம்! வேலையின்மை நெருக்கடியில் கதறும் பாகிஸ்தான்!!
பாகிஸ்தானின் நிதி நிலைமை கடும் நெருக்கடியை சந்திருக்கும் நிலையில், நாட்டில் உள்ள இளைஞர்கள் பலர் வேலையின்மையை எதிர்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 1,667 போலீஸ் கான்ஸ்டபிள் காலியிடங்களுக்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
பாகிஸ்தான் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. ஏறத்தாழ அந்நாட்டு அரசின் கருவூலம் திவாலாகும் நிலையில் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான்கானுக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் தோல்வியுற்று பிரதமர் பதவியிலிருந்து விலகிய நிலையில் அந்நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நிலவி வருகிறது. மறுபுறம் அந்நாட்டின் அந்நிய செலாவணியானது மிக கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது.
அதாவது கடந்த ஏப்ரலில் ரூ.86,100 கோடியாக இருந்த பாகிஸ்தானில் அந்நிய செலாவணியானது தற்போது ரூ.47,560 கோடியாக சுருங்கி இருக்கிறது. உடனடியாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் இது மேலும் சுருங்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்த IMF அரசின் செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
செலவினத்தை கட்டுப்படுத்த எனில் பொதுமக்களுக்கான மானியம் உள்ளிட்டவற்றில் அந்நாட்டு அரசு கை வைத்திருக்கிறது. அதேபோல புதிய திட்டங்கள் எதையும் தொடங்காமல் இருந்து வருகிறது. அரசு செலவு செய்யாததால் பணம் ஒரு பக்கம் அப்படியே தேங்கி நிற்கிறது. ஆனால் இந்த பணத்தை கொண்டு எதையும் செய்யமுடியாது. பணம் தேங்கியதால் மக்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே பாகிஸ்தானில் முதலீடு செய்த நிறுவனங்கள் லாபமடைய முடியாமல் நட்டத்தில் இயங்கி வருகிறது. இதை பார்த்த மற்ற நிறுவனங்களும் அந்நிய முதலீடுகளை பாகிஸ்தானில் தவிர்த்து வருகின்றன.
அந்நிய முதலீடு
நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை இந்நாட்டில் சுமார் ரூ.3,526 கோடி வரை அந்நிய முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இது கடந்த ஆண்டை காட்டிலும் 51 சதவிகிதம் குறைவு என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவையனைத்தும் சங்கிலி தொடர் போல மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. இதனால் அந்நாட்டில் வேலையின்மை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக அரசு எந்த துறையிலும் ஆட்களை எடுக்க முன்வரவேயில்லை. இருக்கும் ஆட்களை கொண்டு ஓட்டிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறது. ஆனால் காவல்துறையில் ஆட்கள் எடுக்காமல் இருக்க முடியாது.
காவல்துறை
ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகளாக இந்த துறையில் ஆட்கள் எடுக்கப்படவில்லை. எனவே சுமார் 1,667 போலீஸ் கான்ஸ்டபிள் காலியிடங்களுக்கு ஆட்களை எடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு நேற்று(ஜன.01) இஸ்லாமாபாத்தில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மணி கணக்கில் காத்திருந்து தேர்வு எழுதி சென்றிருக்கின்றனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்தியாvsபாகிஸ்தான்
பார்ப்பதற்கு கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்திருப்பதை போலவே இருக்கிறது. பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் எகனாமிக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி நாடு முழுவதும் சுமார் 31% இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். இதில் 51% பெண்கள் மற்றும் 16% ஆண்கள் ஆவார்கள். சர்வதேச அளவில் இளைஞர்களை அதிக அளவில் கொண்டிருக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இந்நாட்டில் சுமார் 60% பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள். தற்போது இந்நாட்டின் வேலையின்மை விகிதம் 6.9% ஆக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் 8.3%ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.