;
Athirady Tamil News

“கடவுளை நம்பாதவர்கள் கூட தமிழை போற்றி வணங்குவர்” – ராகுலுடனான உரையாடலில் கமல்ஹாசன்!!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி பங்கேற்ற நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், டெல்லியில் ராகுலின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்விலும் கலந்து கொண்டார். அந்த காணொளியை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது.

இந்திய அரசியல், தமிழர்கள், சுதந்திர வரலாறு, கருத்துச் சுதந்திரம் மற்றும் எல்லை ஊடுருவல், சமூக மற்றும் மத நல்லிணக்கம், ஒருமைப்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இருவரும் கலந்துரையாடினர்.

ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் சுமார் 22 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த பதிவு செய்யப்பட்ட காணொளியில் இருவரும் விவாதித்த விஷயங்களின் சுருக்கத்தை இங்கு வழங்குகிறோம்.
இந்திய பகுதியில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசிய கமல்ஹாசன், “இன்று என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேசுவது என் கடமை என்று நான் உணர்ந்தேன். இந்த 2,200 கிமீ ஒன்றும் இல்லை. வியர்வை மற்றும் ரத்தத்தை சிந்தித் தான் நீங்கள் நடந்துள்ளீர்கள். வரலாற்றை நீங்கள் உள்வட்டத்தில் இருந்து பார்த்திருப்பீர்கள். நான் வெளியில் இருந்து பார்த்தவன் என்று கூறினார்.

68 வயதாகும் கமல்ஹாசன், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முழு நேர அரசியல் களத்தில் இறங்கி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நிறுவி நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களை கண்டவர்.

ராகுலுடனான கலந்துரையாடலில் அவர் இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவாஹர் லால் நேரு, ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் குறித்தும் பேசினார்.
மகாத்மா காந்தியை முதன் முதலாக உணர்ந்தது குறித்து விவரித்த அவர், “நான் காந்தியை எனது 24-25 வயதில் தான் உணர்ந்தேன். அதன் காரணமாகவே நான் ஹே ராமை உருவாக்கினேன். அதுதான் ‘மன்னிப்பு’ தெரிவிப்பை வெளிப்படுத்தும் எனது பாணி” என்றார்.
அதைக் கேட்ட ராகுல், “வெறுப்பு உணர்வு உண்மையில் குருட்டுத்தனமானது மற்றும் தவறான புரிதலால் ஏற்படுவது” என்று கூறினார். அதற்கு கமல்ஹாசன், “அது மட்டுமின்றி விமர்சனத்தின் மிக உச்சம்தான் படுகொலை” என்று விளக்கம் கொடுத்தார்.
தமிழ் மொழியின் பெருமை
உரையாடலின் தொடர்ச்சியாக தமிழ் மொழி உணர்வு குறித்து கமல் பேசினார்.
தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட “மொழிப் பேரினவாதம்” என்ற கருத்தை மறுத்துப் பேசிய கமல்ஹாசன், “எல்லோரையும் போல எங்கள் மொழியைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மதத்தையும் கடவுளையும் நம்பாதவர்கள் கூட தமிழைக் கொண்டாடுகிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.
ராகுல் முன்னெடுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. அப்போது முதல் அந்த பாத யாத்திரை முன்னெடுப்பதை வலுவாக ஆதரிக்கும் முக்கிய பிரபலங்களில் ஒருவராக கமல் விளங்குகிறார். அந்த ஆதரவுதான் ராகுலுடனான அவரது நெருக்கத்துக்கும் இந்த உரையாடலுக்கும் காரணம் என கூறப்படுகிறது.
ஹே ராம் படத்தை தயாரித்தது ஏன்?
மகாத்மா காந்தி பற்றி பேசும்போது, ‘நான் ஏன் ‘ஹே ராம்’ படத்தை தயாரித்தேன் என்பதற்கான விடையை கமல்ஹாசன் வழங்கினார்.
இது குறித்து விரிவாக பேசிய கமல், “எனது தந்தை ஒரு காங்கிரஸ்காரர். ஆனால் நான் பதின்பருவத்தில் இருந்தபோது எனது சூழல் என்னை காந்திஜியின் மோசமான விமர்சகனாக ஆக்கியது. அப்போதெல்லாம் என் தந்தை நீ வாழும் காலத்தை வைத்து எடைபோடாதே. வரலாறை படி என்பார்.
சுமார் 24-25 வயது இருக்கும்போது நானாகவே காந்திஜியை உணர்ந்தேன். ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், வேகமாகவே நான் அவரது ஒரு ரசிகனாகிவிட்டேன்,” என்றார் கமல்.
மகாத்மா காந்தியைக் கொல்ல நினைத்த (கோட்சே நீங்கலாக மற்றொருவர்) மற்றொருவர், கொலை செய்ய நினைக்கும்போது கடைசி நேரத்தில் நெருங்கி வந்ததும் “மன்னிக்கவும்” என்று சொல்லும் அளவுக்கு மனதை மாற்றிக்கொள்கிறார் என்று படத்தின் கதைக்கருவை கமல் நினைவுகூர்கிறார்.
பின்னர் நாட்டில் மத நல்லிணக்கம் பற்றி பேசிய கமல், யாராவது வேண்டுமென்றே அதை சீர்குலைக்க முற்படும்வரை அமைதியே நீடிக்கும் என்று வாதிட்டார்.
“கேரளா போன்ற இடங்களுக்குச் சென்றால், அங்கு இணக்கமான நிலையே நிலவும். அதை சீர்குலைக்காதவரை அது தொடரும். வெறும் இந்து, முஸ்லிம் என்பதை தாண்டி பல பக்கங்கள் அதில் இருப்பதாக நான் நினைக்கிறேன்,” என்று கமல் குறிப்பிட்டார்.
“இந்த நாடு அதன் பன்முகத்தன்மையுடன் மட்டுமே வளரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றும் கமல் கூறினார்.
சீனாவின் எல்லை ஆக்கிரமிப்பு
ராகுல் காந்தி தலைமையிலான பான்-இந்தியா பாத யாத்திரையான பாரத் ஜோடோ பற்றிக் குறிப்பிடும்போது, “மேடையில் நின்று கொண்டு சொற்பொழிவு ஆற்றுவதற்குப் பதிலாக” மக்களை அடைந்து அவர்கள் பேசுவதை காது கொடுத்துக் கேட்க இது உதவுவதால் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது”, என்கிறார்.
இந்திய நிலப்பரப்பில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக ராகுலும் கமலும் உரையாடினர். அப்போது கமல், இந்திய நிலப்பரப்பில் சீனா அத்துமீறுவதாகக் கூறப்படுவது குறித்த ராகுலின் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராகுல், “இந்த அரசாங்கம் அச்சுறுத்தலை “தவறாகக் கணக்கிட்டுள்ளது” என்று பதிலளித்தார்.
மேலும் சீனாவின் எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு தொடர்பான தகவல்களுக்கு மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோதி அரசு குறைந்த முன்னுரிமையை அளித்து வருவதால் அதை சீனா தனக்கு சாதமாக்கிக் கொண்டுள்ளதாக ராகுல் குற்றம்சாட்டினார்.

21ஆம் நூற்றாண்டில், பாதுகாப்பு பற்றி ஒரு உலகளாவிய பார்வை இருக்க வேண்டும். ஆனால், அதில்தான் அரசாங்கம் தவறாகக் கணக்கிட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். எல்லையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். உண்மை என்னவென்றால், சீனா நமது எல்லைக்குரிய 2,000 சதுர கி.மீ பரப்பை ஆக்கிரமித்திருத்திருக்கிறது.

ஆனால், அரசாங்கம் எதுவும் சொல்லவில்லை. நமது ராணுவம் இந்திய எல்லைக்குள் சீனா இருப்பதாக தெளிவாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், நாட்டின் பிரதமரோ அப்படி யாரும் வரவில்லை என்று கூறுகிறார். இதனால், ‘நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தியா எந்த வகையிலும் எதிர்வினை ஆற்றாது’ என்ற தெளிவான செய்தி சீனாவுக்கு போகிறது,” என்று ராகுல் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலின் தொடர்ச்சியாகப் பேசிய ராகுல், “சீனர்கள் நமது ராணுவத்துடன் நடத்தும் பல்வேறு நிலைகளிலான பேச்சுவார்த்தைகளின்போது கூட, “நாங்கள் உங்கள் எல்லையில் இல்லை என்று உங்கள் நாட்டு பிரதமரே (நரேந்திர மோதி) கூறியிருக்கிறார். எனவே, இது எதைப் பற்றிய பேச்சுவார்த்தை?” என கேட்பதாக அறிகிறோம். இத்தகைய போக்கு, இந்தியாவின் ஒட்டுமொத்த பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் அழித்து விடும்,’ என்று கூறினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தமது பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவேன் என்று ராகுல் பேசினார்.
“21 ஆம் நூற்றாண்டில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாட்டில் மக்களுக்கு உள்ளாகவே ஒரு ஒற்றுமை உள்ளது.

அது நாட்டில் நல்லிணக்கம் இருக்கிறது. மக்கள் சண்டையிடவில்லை. நாட்டில் அமைதி இருக்கிறது போன்ற பார்வையுடன் நாம் இருக்கிறோம். அதாவது நாம் போரை நோக்கி செல்லவில்லை. ஆனால், நாம் தாக்க முடியாதவராக இருக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

பலவீனமான பொருளாதாரம், தொலைநோக்குப் பார்வையில்லாத ஒரு குழப்பமான தேசம், வெறுப்பு மற்றும் கோபம் ஆகியவற்றுக்கும் நமது எல்லைக்குள் இருக்கும் சீனர்களுக்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது. ஏனென்றால் நாம் உள்ளுக்குள்ளேயே பல குழப்பங்களை கையாண்டு வருவது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். உள் குழப்பங்கள் மற்றும் இணக்கமின்றி இருப்பதால் அவர்கள் (சீனர்கள்) என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,” என்று ராகுல் கூறினார்.

ராகுல் காந்தி பின்னர் யுக்ரேனில் உள்ள ரஷ்யாவுடன் சீனா கடைப்பிடிக்கும் தந்திரங்களையும் அதே பாணியை இந்தியாவின் எல்லையிலும் சீனா கடைப்பிடிப்பதாக பேசினார்.

“அடிப்படையில், ரஷ்யர்கள் யுக்ரேனில் என்ன செய்தார்கள் என பார்க்க வேண்டும். மேற்கு நாடுகளுடன் வலுவான உறவை யுக்ரேன் வைத்திருப்பதை ரஷ்யர்கள் விரும்பவில்லை. மேலும் அவர்கள் யுக்ரேனியர்களிடம் நீங்கள் மேற்குடன் வலுவான உறவைக் கொண்டிருந்தால், நாங்கள் உங்களுடைய புவியியலையே மாற்றுவோம் என கூறுகிறார்கள்.

அதுதான் இந்தியாவிற்கும் பொருந்தும். ஏனென்றால், சீனர்கள் நம்மிடம் சொல்ல வருவதும் அதைத்தான். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நாங்கள் உங்கள் புவியியலை மாற்றுவோம். நாங்கள் லடாக்கில் நுழைவோம், அருணாச்சலுக்குள் நுழைவோம். அத்தகைய ஒரு தளத்தை அமைக்கும் அவர்களுடைய அணுகுமுறையைத்தான் நான் பார்க்கிறேன்,” என்று ராகுல் கூறினார்.

ராகுலின் தமிழர், தமிழ்நாடு பாசம்
தமிழ்நாடு, தமிழர்கள் குறித்துப்பேசிய ராகுல், தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் ஒருவனாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு செல்லும் போதெல்லாம் அங்குள்ள மக்களை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள முயல்வேன். உண்மையில் தமிழர்களின் மொழி உணர்வு என்ன என்று கமலிடம் ராகுல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கமல், மொழி உணர்வு தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும் இருப்பதைப் போலவே தமிழர்களுக்கும் உள்ளது.

நம் அனைவருக்கும் அந்த பெருமை உண்டு. ஆனால், தமிழ்நாட்டை பற்றி இங்கு நான் கூற வேண்டும். தமிழ்நாட்டை மற்றவர்கள் ஒரு தனித்தீவு போலவே உணர்கிறார்கள். குறுகிய மனப்பான்மை மற்றும் மொழி வெறி பிடித்தவர்களாக அவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கிராமத்ததிற்கோ நகரத்துக்கோ சென்று நேரு அல்லது சுபாஷ் சந்திர போஸ் என குரல் கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக ஒரு கறுப்பு மனிதர் நம்மை திரும்பிப் பார்ப்பார். ஆனால், அவர்களுக்கும், நேருவுக்கும் போஸுக்கும் எந்தவொரு உருவ ஒற்றுமையும் இருக்காது. பல காந்திகளையும் அங்கு பார்க்க முடியும். அதுதான் தமிழக மக்களின் எண்ண ஓட்டம் என்று கமல் கூறினார்.

“ஏதோ ஒரு கட்டத்தில் மத்திய அரசு தங்களை புறக்கணிப்பதாக தமிழர்கள் உணர்கிறார்கள். தற்போது நடப்பதும் அதுதான். ஆனால் அது நிரந்தரம் அல்ல என்று கமல் தெரிவித்தார்.
கலந்துரையாடலின்போது தமிழக மக்களின் பண்பாடு குறித்து ராகுலும் கமலும் பேசினார்கள்.

அப்போது ராகுல், தமிழக மக்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. அவர்கள் வெளிப்படுத்தும் அன்பும் பாசமும் மற்ற மாநில மக்களை தாண்டி என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. தமிழர்கள் அன்பு காட்டும் விதம் உண்மையிலேயே வித்தியாசமானது என்று கூறினார்.

நான் மகாராஷ்டிராவுக்கு போயிருக்கிறேன். அங்குள்ளவர்களும் அன்பு காட்டுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் வித்தியமான நிலையை உணர முடிகிறது. அது எப்படி அவர்களால் முடிகிறது என்பதை எப்போதும் நான் வியக்கிறேன் என்று ராகுல் கூறினார்.

அப்போது கமல், இது கலாசாரத்தின் ஒரு பகுதி. மிகப் பழமையான ஒரு கலாசாரம். தமிழக மக்கள் பல போர்களை கண்டுள்ளனர். சமணர்கள் மற்றும் பெளத்த மதங்களில் இருந்தும் பலவற்றை அவர்கள் கற்றுள்ளனர். அனைத்தும் சேர்ந்த கலவைதான் அந்த வெளிப்பாடு. இதுபோன்ற அன்பை காமராஜர், எம்ஜிஆர் போன்ற தலைவர்களும் அனுபவித்துள்ளனர்.

அந்த உணர்ச்சிதான் தங்களுக்கு நெருக்கமான தலைவர்களை காணும்போது மக்கள் கண் கலங்கியும் உற்சாகத்தில் துள்ளுவதும் ஏற்படுகிறது என்றார்.
தமிழ் மொழியும் தமிழக மக்களுக்கு மிக முக்கியமானது தானே என்று ராகுல் கேட்டபோது, “ஆமாம். முக்கியம்தான். தமிழ்நாட்டில் கடவுளை நம்பாத நாத்திகர்கள் கூட தமிழை போற்றி வணங்குவதை நீங்கள் பார்க்க முடியும்,” என்று கமல் பதிலளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.