பெங்களூருவில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை- பா.ஜனதா எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு!!
கர்நாடக மாநிலம் பெங்களூர் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டை சேர்ந்தவர் பிரதீப்(வயது47). இவர் பெங்களூர் கனகபுரா ரோடு ககலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு ரிசார்ட் பகுதிக்கு குடும்பத்தினருடன் காரில் வந்தார். குடும்பத்தினர் ரிசார்ட்டுக்கு சென்ற நிலையில் காரில் இருந்த பிரதீப் திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காரின் அருகே சென்று பார்த்த போது டிரைவர் இருக்கையில் பிரதீப் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் உடனடியாக ககலிபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரதீப் தற்கொலை செய்துகொண்ட காரில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மகாதேவ்பூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலி உள்பட 6 பேரின் பெயர்களை பிரதீப் எழுதி வைத்து இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரதீப் பெங்களூருவில் உள்ள ஒரு கிளப்பில் ரூ 1.2 கோடி வட்டிக்கு கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். அந்த கிளப்பை பெங்களூருவை சேர்ந்த கோபி, சோமையா ஆகியோர் நடத்தினர். கிளப்பில் பணிபுரியும் சம்பளம் உட்பட ஒவ்வொரு மாதமும் அவருக்கு ரூ.3 லட்சம் திருப்பி தருவதாக கிளப் நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். ஆனால், பணத்தை எடுத்துக் கொண்ட கோபி, சோமையா ஆகிய இருவரும், பல மாதங்களாகியும் பணத்தைத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.
இதனால் அதற்கான வட்டியைத் திருப்பிச் செலுத்த பிரதீப் பல கடன்களை வாங்கியதாகவும், பணம் செலுத்துவதற்காக தனது வீடு மற்றும் விவசாய நிலத்தையும் விற்றுள்ளார். இதையடுத்து, பிரதீப், பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலியிடம் இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றார்.
பிரதீப்பின் பணத்தைத் திருப்பித் தருமாறு எம்.எல்.ஏ. இருவரிடமும் பேசியதாகவும், ஆனால் அவர்கள் ரூ. 90 லட்சத்தை மட்டுமே திருப்பித் தருவதாகக் கூறியதாகவும் தெரிகிறது. இதன்காரணமாக ஏற்பட்ட விரக்தியில் பிரதீப் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கோபி, சோமையாவுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவலி செயல்பட்டதாக பிரதீப் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் பிரதீப்பின் சகோதரரின் சொத்துக்கு எதிராக சிவில் வழக்குப் பதிவு செய்து, பிரதீப்பை மனரீதியாக சித்திரவதை செய்து துன்புறுத்தியதாக டாக்டர் ஜெயராம் ரெட்டி என்பவர் மீதும் அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனது சாவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் தான் காரணம் என்று பிரதீப் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ககலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தை ராம்நகர எஸ்.பி. சந்தோஷ்பாபு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.