;
Athirady Tamil News

பாகிஸ்தானில் ஆபத்தை உணராமல் பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை அடைத்து விற்பனை!!

0

பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு மக்கள் மேற்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கையிருப்பில் குறைந்து வருவதால், மக்கள் சமையல் எரிவாயுவை சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை வீடியோவில் காண முடிந்தது.

நாட்டின் எரிவாயு குழாய் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட கடைகளில் இயற்கை எரிவாயுவை இந்த பிளாஸ்டிக் பைகளில் நிரப்புகின்றனர். கசிவைத் தவிர்க்க, விற்பனையாளர்கள் அந்த பையை வால்வு மூலம் இறுக்கமாக மூடுகின்றனர். பைகள் பின்னர் மக்களுக்கு விற்கப்படுகின்றன.

பின்னர் அவர்கள் ஒரு சிறிய மின்சார பம்ப் உதவியுடன் எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகளில் மூன்று முதல் நான்கு கிலோ வரை எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணி நேரம் ஆவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இரண்டு சிறுவர்கள் எரிவாயு நிரப்பப்பட்ட இரண்டு பெரிய வெள்ளை பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. “இந்த பிளாஸ்டிக் பைகள் வெடித்து விபத்து ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சம் ஏற்பட்டாலும், சிலிண்டர்களின் விலை உயர்வால் ஏழைகளாகிய எங்களுக்கு வேறு வழியில்லை, என்கின்றனர் மக்கள்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நடைமுறை மிகவும் ஆபத்தானது என்பதால், வீடியோவைப் பார்த்த பலரும் பாதுகாப்பு குறித்த கவலையை பதிவிட்டுள்ளனர். சிறிதளவு தவறு நேர்ந்தால்கூட வாயு கசிவு மற்றும் வெடிப்புக்கு வழிவகுக்கும் என்பதை பயனர்கள் குறிப்பிட்டனர். ”என்னால் இதை நம்ப முடியவில்லை. பாகிஸ்தானில் சரக்கு மற்றும் சேவை துறை என்ற ஒரு துறை இல்லையா? அடிப்படை பாதுகாப்பு தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டுமா, இல்லையா?” என ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சிலிண்டர்களின் இருப்பு குறைந்ததால், விற்பனையாளர்கள் சப்ளையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காரக் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்கு நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எரிவாயு இணைப்பு இல்லை. எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய் உடைந்ததில் இருந்து சரிசெய்யப்படாமல் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.