பாடசாலைகளிலேயே அதிக நீர் விரயம்!!
அதிகளவு நீர் விரயமாகும் இடமாக பாடசாலை வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கு அடுத்த இடத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் இருப்பதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க தெரிவித்தார்.
பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு இலவசமாக நீர் விநியோகம் செய்யப்படுவதனால் நீர் விரயம் அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்ட இடங்களில் உள்ள குடிநீர் குழாய்களில் இருந்து அதிகளவில் நீர் விரயமாவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீர் விரயம் காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வழிபாட்டுத் தலங்களுக்கான நீர் விநியோகத்துக்காக குறிப்பிட்ட தொகையை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும், குடிநீர் குழாய் உடைப்பு, நீர்க் கசிவு போன்ற காரணங்களால் கணிசமான அளவு குடிநீர் வீணாகுவதாகவும் தெரியவருகிறது.