பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறல்: திமுக இளைஞர் அணியினரை கைது செய்ய வலியுறுத்தல்!!
பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணியினரை கைது செய்ய வேண்டும் என்று பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த டிச. 31-ம் தேதி இரவு திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதுடைய பெண் காவலரிடம் திமுக இளைஞர் அணியை சேர்ந்த இருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீறவே, பெண் காவலர் கதறி அழுதுள்ளார். உடனே சக காவலர்கள் இதை தட்டிக் கேட்டுள்ளனர். தகவல் அறிந்து சென்ற விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர், அங்கிருந்து தப்பமுயன்ற இளைஞர்களை விரட்டிப்பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள், போலீஸாரை தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேடையில் இருந்து இறங்கி வந்த எம்எல்ஏ பிரபாகர் ராஜா, பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, பிடிபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் போலீஸார் மத்தியில் அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் அதிகாரிகள் உத்தரவின் பேரில், பெண் காவலரிடம் திமுகவினர் அத்துமீறி நடந்து கொண்டது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம் (24) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறோம். அவர்கள் இருவரும் 129-வது வட்ட திமுக இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றனர். இந்நிலையில், இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமி: திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்களை திமுக நிர்வாகிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். காவல் துறைக்கு பொறுப்பாளரான முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனங்கள். திமுக ஆட்சியில் சாதாரண பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதை இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எனவே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கைது செய்ய முற்பட்ட காவல் துறையினரிடம், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம். திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் இவ்வாறுதிமுக நிர்வாகிகள் நடந்துகொண்டது, அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரையும் உடனே கைது செய்யுமாறு முதல்வர் உத்தரவிட வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: எந்த காலத்திலும் திமுகவினர் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். காவல் துறையினருக்கே இந்த கதி என்றால், மற்ற பெண்களின் நிலை என்ன ஆகும். இதற்கு திமுக தலைவரும், இளைஞர் அணி செயலாளரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் விசாரித்தோம். புகாருக்கு உள்ளான நபர்களிடமும் விசாரித்தோம். அந்த நபர்கள் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டதோடு, வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதி கொடுத்தனர். சம்பந்தப்பட்ட பெண் காவலர், தான் அளித்த புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதோடு, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என எழுதிக் கொடுத்து விட்டார்’ என்றனர்.