சிபிஐ உட்பட விசாரணை அமைப்புகளின் தகவல்களை அறிய அமலாக்கத் துறைக்கு புதிய மென்பொருள்!!
சிபிஐ உட்பட விசாரணை ஏஜென்சிகளின் தகவல்களை எளிதில் அணுகுவதற்கான புதிய மென்பொருளை அமலாக்கத் துறை (இடி) உருவாக்கி வருகிறது. அந்த மென்பொருளுக்கு “சீடோஸ்” (கோர் இடி ஆப்பரேடிங் சிஸ்டம்) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள், நிதி முறைகேடு, பண மோசடிகளில் விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், அவற்றின் தொடர்புகளை கண்டறியவும் பெரிதும் உதவும்.
குறிப்பாக, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), தேசிய புலனாய்வு கிரிட் (நாட்கிரிட்) மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), நிதி நுண்ணறிவுப் பிரிவு (எப்ஐயு) உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் தரவுகளை இந்த மென்பொருளை பயன்படுத்தி அமலாக்கத் துறை அதிகாரிகள் எளிதில் பெறமுடியும்.
மேலும், தனிநபர்கள், பரிவர்த்தனைகள், வழக்குகள், துணை ஆவணங்கள், அடிப்படை தரவுகள் ஆகியவை தொடர்பாக ஆன்லைன்மூலம் தேடலை மேற்கொள்ள அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு “சீடோஸ்” பெரிதும் உதவும். சட்ட அமலாக்க முகவர்களிடமிருந்து (எல்இஏ) பெறப்பட்ட அனைத்து உளவுத் துறை தரவுகள், இடியின் தற்போதைய வழக்குகள், தனிப்பட்ட வங்கி கணக்குகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், மொபைல் எண்கள், பான், ஆதார், போன்ற விவரங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை இந்த மென்பொருள் மூலம் பராமரிக்க முடியும்.
குற்றவாளிகளின் உண்மை விவரங்களை சரிபார்க்க மாதக்கணக்கில் ஆகும் நிலையில், இந்த மென்பொருளை பயன்படுத்தி உடனடியாக கண்டறியலாம்.
மேலும், இது பல்வேறு விசாரணை அமைப்புகளிடயே விரைவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் (எப்ஐஆர்) களஞ்சியம் என்று கூறப்படும் சிசிடிஎன்எஸ்/ஐசிஜெஎஸ் (குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பு /குற்றவியல் நீதி அமைப்பு) உடன் அனைத்து இடி அலுவலகங்கள் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.