சீனா உட்பட 6 நாடுகள் வழியாக இந்தியா வந்தாலும் கட்டுப்பாடு!!
கரோனா ஆபத்து அதிகமுள்ள சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதில் கரோனா பாதிப்பு இல்லை (கரோனா நெகட்டிவ்) என்றால் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும். இவர்கள் பயணத்துக்கு முன் கரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை ஏர் சுவிதா இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது நேற்று (ஜனவரி 1, 2023) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் வேறு நாடுகளில் இருந்து புறப்பட்டு, இந்த 6 நாடுகள் வழியாக வரும் பயணிகளுக்கும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சீனாவில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனாவில் கடந்த மாதம், டிசம்பர் 20-ம் தேதி வரை, நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 18 சதவீதம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நிரம்பி வழியும் மருத்துவமனைகள், நோய்க்கு போராடி வரும் மக்கள் என சமூக வலைதளங்களில் பதிவுகள் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.