காரில் 4 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு – குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கேஜ்ரிவால் வலியுறுத்தல்!!
டெல்லியில் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சுல்தான்புரி பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்காக வெளியே சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது, அந்த வழியே வந்த மாருதி பலேனோ காருடன் அந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் அந்த காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண்ணின் ஆடை கிழிந்து நிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வரை அந்த இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதில் அந்த பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: நமது சமூகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. காரில் சிக்கிய பெண் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே டெல்லியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகக் கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வீட்டின் முன்பாக ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தொண்டர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.டெல்லி சுல்தான்புரி பகுதியில் காரில் சிக்கி 4 கி.மீ. தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரின் புகைப்படங்களை நேற்று டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.