காங்கிரஸ் காரியக் கமிட்டி பிப்ரவரி 24-ந்தேதி கூடுகிறது!!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அடுத்த மாதம் (பிப்ரவரி) காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:- 85-வது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை பிப்ரவரி மாதம் நடத்துவது என ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்து இருந்தது.
அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த கூட்டம் ராய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் போது காங்கிரஸ் புதிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் 12 பேர் கமிட்டி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் தலைவரால் பரிந்துரை செய்யப்படுபவர்கள். இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அரசியல் நிலவரம், பொருளாதார நிலைமை, சர்வதேச விவகாரங்கள், விவசாயிகள் பிரச்சினை, சமுக நீதி, இளைஞர் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.