வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் தங்கத்தேர் பவனி!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. கோவில் உள்ளே அதிகாலை 1.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் சொர்க்கவாசல் வழியாக சென்று வி.ஐ.பி. பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு காலை 6 மணியளவில் இலவச தரிசன பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து காலை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்கத்தேரை தேவஸ்தான பெண் ஊழியர்கள், ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
பின்னர் திருமலையில் உள்ள அன்னமயபவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வைகுண்ட துவார தரிசனம் செய்ய அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
ஸ்ரீவாணி டோக்கன்கள் நேரில் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் 9 இடங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் திருமலையை அடைந்து, அங்குள்ள தரிசன வரிசைக்கு சென்று விட வேண்டும்.
பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பக்தர்கள் சிரமமின்றி வைகுண்டம் துவார தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகளும், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் சேவை செய்து வருகின்றனர்.