பா.ஜனதா-கம்யூனிஸ்டு இடையே ரகசிய உறவு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!!
கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- அனைவரையும் உள்ளடக்கிய கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். அதனால் ஒவ்வொருவரையும் அரவணைத்து செல்வது அவசியம். மக்களை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப்பார்ப்பது பா.ஜனதாவின் கொள்கை.
கொள்கை அடிப்படையில், பா.ஜனதாவும், கம்யூனிஸ்டு கட்சிகளும் எதிரெதிர் துருவங்கள். ஆனால், இரு கட்சிகள் இடையே ரகசிய உறவு நிலவுகிறது. மக்களை தொண்டர்கள் பணிவுடன் அணுக வேண்டும். மக்களை சந்தித்து, எதிர்க்கட்சிகளின் பொய் புகார்களை முறியடிக்க வேண்டும்.
மாநில அரசின் நலத்திட்டங்கள் எல்லோருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊழல் பெருச்சாளிகளை ஒழித்துக்கட்ட கட்சி மட்டத்தில் ஊழல் தடுப்பு முறை அறிமுகப்படுத்தப்படும். பஞ்சாயத்து மட்டத்தில், அனைத்து ஊழல் புகார்களையும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது.
அதை எதிர்கொள்வதற்காக ஒரு பிரசார இயக்கத்தை மம்தா பானர்ஜி தொடங்கிவைத்தார். அந்த இயக்கம், 11-ந் தேதி தொடங்கி, 60 நாட்கள் நடைபெறும். 3 லட்சத்து 50 ஆயிரம் தொண்டர்கள், மாநிலம் முழுவதும் சுமார் 10 கோடி பேரை சந்தித்து, நலத்திட்டங்களை கிடைக்க செய்வார்கள் என்று மம்தா பானர்ஜி கூறினார்.