பிறக்கவிருக்கும் குழந்தைக்கு பொருட்கள் வாங்கிய தாய்க்கு பிணை!!
பிறக்கவிருக்கும் தனது பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கிய கர்ப்பிணியான அந்தத் தாய் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருணம் வைபவமொன்றுக்கு அணிந்து சென்று மீண்டும் கொண்டுவந்து தருகின்றேன் என அந்த கர்ப்பிணி தாய், பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணிடம் சுமார் ஒன்றரை இலட்சம் பெறுமதியான தங்க சங்கிலியை இரவல் வாங்கியுள்ளார்.
அந்த தங்க சங்கிலியை அடகுவைத்து தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்குத் தேவையான பொருட்களை அந்தப் பெண் கொள்வனவு செய்துள்ளார்.
கொழும்பு கரையோர பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இரவல் வாங்கிய பெண்ணை, கொழும்பு பதில் நீதவான், இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
“பிறக்கவிருக்கும் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருமாறு வைத்தியசாலையில் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதிலிருந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லை. ஆகையால், இரவல் வாங்கிய தங்க மாலை அடகுவைத்து, பொருட்களை கொள்வனவு செய்துவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார் என கரையோர பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
திருமண வைபவத்துக்கு அணிந்து சென்று, திரும்பி வந்ததும் தருவேன் எனக்கூறி, இரவல் வாங்கிச் சென்ற தங்க மாலையை குறிப்பிட்ட நாளில் திரும்பி தரவில்லை. கேட்டதற்கு அடகுவைத்து பிறக்கவிருக்கும் குழந்தைக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்துவிட்டேன் என கூறுகிறார். என தங்கசங்கிலியை இரவல் கொடுத்த பெண், கரையோர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேகநபரை தேடிச் சென்று கைது செய்வதற்கு முயன்றபோது. பிரசவத்துக்கு நாள் நெருங்கி இருந்தமையால், அப்பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டதாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்தனர்.
அதனடிப்படையில், பொரளை சீமாட்டி வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த பதில் நீதவான், சந்தேகநபரான அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு, அப்பெண்ணை சரீர பிணையில் விடுதலைச் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்.