ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரானில் இரு சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு!!
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு சிறுவர்களுக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் பெயர்கள் குறிப்பிடப்படாத 18 வயதை பூர்த்தியடையாத சிறுவர்கள் இருவருக்கு விசாரணையின் முடிவில் ஈரான் அரசு தூக்குத் தண்டனை விதித்துள்ளதாக ஈரானின் நீதித் துறை இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 23 வயதையுடைய இரண்டு இளைஞர்களுக்கு 2022-ஆம் ஆண்டின் இறுதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றி இருந்தது ஈரான். மேலும், ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 100 பேருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஈரான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதற்கிடையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனைக்கு எதிராக போராட்டக்காரர்கள் சிலர் மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அவற்றில் சிலரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மறுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு வருகின்றது.
மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.