ஆமாம், நான் அப்படித்தான்” – சர்ச்சை ஆடியோவுக்கு இம்ரான் கான் அளித்த விளக்கம்!!
ராணுவத் தளபதியாக இருந்த கமர் ஜாவெத் பாஜ்வாவின் பதவிக்காலத்தை நீட்டித்ததுதான் தான் செய்த மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் தொடர்பான பாலுறவுப் பேச்சு அடங்கிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, ”இந்த ஆடியோ போலியானது அல்ல. நூறு சதவீதம் உண்மையானது. வரும் நாட்களில் இம்ரான் கான் தொடர்புடைய வீடியோக்களும் வரலாம்” என்று தெரிவித்தார்.
அந்த ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து, லாகூரில் உள்ள தனது இல்லத்தில் இம்ரான் கான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “உயர் அதிகார மட்டத்தில் இருப்பவர்கள்தான் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுபோன்ற ஆடியோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதன் மூலம் இளைஞர்களுக்கு நாம் என்ன செய்தியைக் கூறுகிறோம்?” என்று இம்ரான் கான் கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி கமர் ஜாவெத் பாஜ்வா மீது தனக்கு இருந்த சந்தேகம் குறித்து இம்ரான் கான் தெரிவித்தார். ”பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய ராணுவத் தளபதி பாஜ்வாவை சந்தித்தேன். அப்போது, என கட்சியைச் சேர்ந்த சிலர் தொடர்பான ஆடியோ மற்றம் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இளம் வயதில் ஒழுக்கம் இல்லாமல் நான் இருந்தது குறித்தும் நினைவூட்டினார். அதற்கு நான், ‘ஆமாம் நான் அப்படித்தான் இருந்தேன். நான் தூய்மையானவன் எனக் கூறவில்லையே’ என்று அவரிடம் கூறினேன். பிரதமர் பதவியில் இருந்து என்னை இவர் அகற்றுவார் என அப்போதே எனக்குத் தோன்றியது.
மிகக் கவனமாக இரண்டு பக்கமும் விளையாடி நான் பதவியில் தொடர முடியாதவாறு செய்துவிட்டார். அதோடு, ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராக்கிவிட்டார். பாஜ்வா எனது முதுகில் குத்திவிட்டார். பாவ்ஜாவின் ராணுவத் தளபதி பதவியை நீட்டித்ததுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு. பதவியை நீட்டித்ததும் அவர் தனது உண்மையான முகத்தை காட்டத் தொடங்கிவிட்டார்.
நான் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் ராணுவத்தில் அவர் உருவாக்கிய கட்டமைப்பு இன்னமும் வலிமையாகவே இருக்கிறது” என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.