எங்க மேல கைய வெச்சா…1971-ல் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்த படத்தை பகிர்ந்து தலிபான்கள் வார்னிங்!!!
ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்களுக்கும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 1971-ம் ஆண்டு யுத்தத்தின் போது இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்த படத்தை பகிர்ந்துள்ள தலிபான்கள், தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கிடைக்கும் என எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அஷரப் கனி தலைமையிலான அரசு கவிழ்ந்த நிலையில் தலிபான்கள் மீண்டும் அந்நாட்டை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய போது அவர்களை ஆதரித்த உலகின் முதல் நாடு பாகிஸ்தான். தலிபான்கள் கைகளில் ஆப்கானிஸ்தான் சிக்கியதைக் கொண்டாடுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்பு தலைவர், காபூல் சென்று இருந்ததார். அதன்பின்னரே உலக நாடுகள் ஒவ்வொன்றாக தலிபான்களுடன் கை குலுக்கவும் தொடங்கின.
இன்னொரு பக்கம், தலிபான்கள் அமைப்பு பாகிஸ்தானையும் தங்கள் வசமாக்குவதற்காக தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை உருவாக்கி இருந்தனர். தெஹ்ரிக் தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி வந்தனர். பாகிஸ்தானுக்கும் தெஹ்ரிக் தலிபான்களுக்கும் இடையே போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்தது. கடந்த ஆண்டு இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தெஹ்ரிக் தலிபான்கள் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து பலுசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் தெஹ்ரிக் தலிபான்கள், பாகிஸ்தான் ராணுவம் இடையேயான மோதல்கள் உக்கிரமடைந்தன.
தெஹ்ரிக் தலிபான்கள் மீதான பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் கடுமையாக கண்டித்தது. இதனால் ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையே மோதல் போக்கு வெடித்தது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே எல்லைகளில் ராணுவ மோதலும் நிகழ்ந்தது. இந்த ராணுவ மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு தலிபான்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலிபான்களின் மூத்த தலைவரும் துணைப் பிரதமராக அழைக்கப்படுகிற அகமது யாசீர் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்தப் பதிவில், 1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் படமும் பகிரப்பட்டுள்ளது. அத்துடன், துருக்கியில் குர்து இன மக்களை குறிவைத்து தாக்கியதைப் போல நினைத்துவிட வேண்டும். எத்தனையோ சாம்ராஜ்ஜியங்களின் புதைகுழியாக இருந்தது இந்த ஆப்கானிஸ்தான் நிலம். எங்கள் மீத் ராணுவத் தாக்குதல் நடத்த நினைக்க வேண்டாம்.
அப்படி ராணுவ தாக்குதலை நடத்த முயற்சித்தால் 1971-ம் ஆண்டு இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்த அவமானகரமான வரலாறுதான் மீண்டும் நிகழும் என எச்சரித்துள்ளார் அகமது யாசீர். 1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் என அறியப்பட்ட வங்கதேசத்தின் விடுதலைக்காக இந்தியா பாகிஸ்தான் இடையே யுத்தம் நடந்தது. இந்த யுத்தத்தின் முடிவில் சுமார் 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். 2-ம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய சரணடைதல் இது என்கின்றன வரலாற்றுப் பக்கங்கள்.