மானிய விலையில் நடமாடும் அரிசி விநியோகம் காரைநகரில் ஆரம்பம்! (PHOTOS)
காரைநகர் கூட்டுறவு சங்கம் ஊடாக நடமாடும் அரிசி விநியோக சேவை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதி செய்யும் நோக்கில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் அனுசரனையில் முதற்கட்டமாக காரைநகர் பிரதேசத்தில் கூட்டுறவு சங்கங்களினூடாக மானிய விலையில் தரமான அரிசியினை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சந்தை விலையிலும் 50 ரூபாய் விலை குறைத்து மானிய அடிப்படையில் வடக்கு மாகாண மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இச் செயற்றிட்டம் முதல் கட்டமாக காரைநகர் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்றிட்டம் மூலம் மக்களின் பொருளாதார சுமையினை ஓரளவுக்கு குறைத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதி செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த திட்டம் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
ஆரம்ப நிகழ்வில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், காரைநகர் பிரதேச செயலாளர், காரைநகர் பிரதேச சபை தவிசாளர், காரைநகர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.