கழிவு நீரில் பரவும் கொரோனா? மொத்தம் 140 வேரியண்ட்களாம்.. சீனாவை சூழும் இருண்ட காலம்!
சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது.
சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. முன்பு மற்ற நாடுகளில் கொரோனா உச்சத்தில் இருந்த போது, சீனாவில் இயல்பு நிலை இருந்தது. ஆனால், இப்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
அங்கு ஜீரோ கோவிட் பாலிசி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எப்போது ஜீரோ கோவிட் கொள்கையை அவர்கள் தூக்கினார்களோ.. அப்போதில் இருந்தே வைரஸ் பாதிப்பு அங்கு உச்சம் தொடத் தொடங்கிவிட்டது.
சீனா
சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதிலும் தீவிர பாதிப்பு அதிகம் ஏற்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில வாரங்களில் மட்டும் பல கோடி பேருக்கு அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பெருநகரங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்கனவே உச்சம் தொட்டுள்ள நிலையில், இப்போது அடுத்தகட்டமாக மற்ற நகரங்களிலும் வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. சீன வேக்சின்களால் தீவிர பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதும் வைரஸ் பரவல் இந்தளவுக்கு வேகமாகப் பரவ ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
உச்சம்
இதற்கிடையே சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கச் சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குறைந்தது 130 ஓமிக்ரான் துணை வேரியண்ட்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் முதலில் கொரோனா பரவ தொடங்கிய போது கூட இந்தளவுக்கு நிலைமை மோசமாக இல்லை. வைரஸ் பரவலைச் சீனாவால் துல்லியமாகக் கண்காணிக்க முடியவில்லை என்பதே உண்மை.
கழிவு நீர்
இதற்கிடையே கொரோனா பரவலைக் கண்காணிக்கக் கழிவு நீர் அமைப்புகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் சில நாடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங் மற்றும் ஷென்சென் நகரங்களில் சோதனை முறையில் கழிவுநீர் கண்காணிப்பு முறையைச் சீனா ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கழிவு நீர் மூலம் கொரோனா பரவுகிறதா என்பதைக் கண்காணிக்கவே சீனா இந்த நடைமுறையைக் கையில் எடுத்துள்ளது.
நடவடிக்கை
சீனாவில் இப்போது இப்போது வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டுள்ள நிலையில், இதுவரை அந்நாட்டு அரசு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரியளவில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது சீனா முதல்முறையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரைச் சோதனை செய்து அதில் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறியும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.
எதற்கு
இது குறிப்பிட்ட பகுதியில் எந்தளவுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதைக் கண்டறிய உதவும். மேலும், எந்த பகுதியில் எந்த வேரிண்ட்கள் உள்ளன என்பதையும் கண்டறிய உதவும். அதற்கேற்ப கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். முதற்கட்டமாகச் சோதனை அடிப்படையில் பெரு நகரங்களில் மட்டும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது. கொரோனா பாசிட்டிவ் கேஸ்களை கண்காணித்து, வைரஸ் பாதிப்பு, புதிய வேரியண்ட்கள் குறித்த தகவல்களை உடனடியாக தர வேண்டும் என்றும் உள்ளூர் அமைப்புகளுக்குச் சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
பலன் தருமா
அதேநேரம் இதிலும் கூட துல்லியமான டேட்டா கிடைக்காது என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.. கழிவு நீர், மழைநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுநீர் என அனைத்தும் ஒரே குழாய் அமைப்பில் வருவதால், வைரஸ் பாதிப்பு குறித்த துல்லியமான டேட்டாக்களை பெறுவது கடினம் என்பதால் கொரோனா பாதிப்பைக் கண்காணிக்க மாற்று வழிமுறைகளையும் சீனா சிந்திக்க வேண்டும் என்றும் சில வல்லுநர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.