2008இல் களவு போன கிமு 332 காலகட்ட சவப்பெட்டியை எகிப்திடம் ஒப்படைத்த அமெரிக்கா!!
அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பச்சை நிறத்திலான பழங்கால எகிப்து சவப்பெட்டி மீண்டும் எகிப்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிமு 664 முதல் கிமு 332 காலகட்டத்தைச் சேர்ந்த 9.5 அடி நீளமுள்ள இந்த சவப்பெட்டி அன்கென்மாத் என்ற பாதிரியாருடையது.
இது வடக்கு எகிப்தில் உள்ள அபு சர் நெக்ரோபோலிஸிலிருந்து ஒரு கலைப்பொருட்கள் கடத்தல் கும்பலினால் கொள்ளையடிக்கப்பட்டு, ஜெர்மனி வழியாக கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் பழங்கால பொருள் சேகரிப்பாளர் ஒருவர், அதைக் கடந்த 2013ஆம் ஆண்டு ஹியூஸ்டனில் உள்ள இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.
பல ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, திங்கட்கிழமை கெய்ரோவில் நடந்த நிகழ்வில் அமெரிக்க பிரதிநிதிகள் சவப்பெட்டியை எகிப்திடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சமேஹ் ஷோக்ரி, சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் துறை அமைச்சர் அகமது இசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய எகிப்திற்கான அமெரிக்க தூதர் டேனியல் ரூபின்ஸ்டீன், “இந்த நிகழ்வு தொல்பொருட்கள் பாதுகாப்பு மற்றும் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அமெரிக்கா மற்றும் எகிப்திற்கு இடையிலான நீண்ட கால ஒத்துழைப்பின் அடையாளம்” என்றார்.
இந்த சவப்பெட்டி திரும்பக் கிடைத்திருப்பது கடத்தப்பட்ட கலைப்பொருட்களை மீட்பதற்கான எகிப்தின் தீவிர முயற்சிகளைக் காட்டுவதாக தொல்பொருட்கள் துறை அமைச்சர் அகமது இசா கூறினார்.
மன்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி ஆல்வின் ப்ராக், 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த சவப்பெட்டி, பழங்காலப் பொருட்களைக் கடத்தும் பன்னாட்டு கும்பலால் எகிப்திலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டதை கடந்த செப்டம்பரில் உறுதிசெய்தார்.
முன்னதாக இதே கும்பல்தான் எகிப்திலிருந்து தங்க நிற சவப்பெட்டி மற்றும் நினைவுச் சின்ன நடுகல்லை திருடியிருந்தது. தங்க நிற சவப்பெட்டி கடந்த 2019ஆம் ஆண்டும், நடுகல் 2020ஆம் ஆண்டும் எகிப்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
அண்மைக்காலங்களில் அமெரிக்கா மட்டுமல்ல, மற்ற சில நாடுகளும் பழங்கால பொருட்களை எகிப்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளன.
கடத்தப்பட்ட அல்லது ஜெருசலேமில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 95 பழங்கால தொல்பொருட்களை கடந்த 2021ஆம் ஆண்டு எகிப்திடம் இஸ்ரேல் ஒப்படைத்தது.
அயர்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் சவப்பெட்டி, பதப்படுத்தப்பட்ட மனித உடலின் எச்சங்கள் மற்றும் பதப்படுத்துதல் செயல்முறைக்கு பயன்படுத்தப்பட்ட கேனோபிக் ஜாடிகளை திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கடந்த மாதம் கூறியது.