கிம் ஜாங் உன்: அணு ஏவுகணை, அடுத்த வாரிசு – இவரிடம் இந்த ஆண்டு என்ன எதிர்பார்க்கலாம்?
இதுவரை இல்லாத அளவு கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. மேலும் கூறவேண்டும் என்றால், வட கொரியா இதுவரை ஏவிய ஏவுகணைகளில் கால் பங்கு 2022ல் ஏவப்பட்டதுதான். வடகொரியா அணு ஆயுத நாடாக மாறிவிட்டதாக கிம் ஜாங்-உன் அறிவித்த ஆண்டும் அதுதான்.
2017ல், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவை கடுமையாக எச்சரித்திருந்ததால் பதற்றம் ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் தற்போது மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
அணு ஆயுத வளர்ச்சி
2022ல், வட கொரியா அதன் ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
தென் கொரியாவை தாக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்ட குறுகிய தூர ஏவுகணைகள், அதனை தொடர்ந்து ஜப்பானை தாக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்ட நடுத்தர தூர ஏவுகணைகள் ஆகியவற்றை பரிசோதித்து 2022ஆம் ஆண்டை வட கொரியா தொடங்கியது.
ஆண்டின் இறுதியில் அதன் மிகவும் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையான ஹ்வாசாங் 17-ஐ வடகொரியா வெற்றிக்கரமாக சோதித்தது.
அமெரிக்க நிலப்பரப்பில் எங்கும் சென்றடையும் திறன் கொண்ட வகையில் இது உருவாக்கப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது.
கடந்த ஆண்டில் கிம் ஜாங்-உன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தனது வரம்பையும் குறைத்தார்.
செப்டம்பரில் வட கொரியா ஒரு அசைக்க முடியாத அணு ஆயுத நாடாக மாறிவிட்டது என்று அறிவித்த பிறகு, இந்த ஆயுதங்கள் போரைத் தடுப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்படவில்லை.
போரை வெல்வதற்கு முன்கூட்டியே தாக்குதலுக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் வெளிப்படுத்தினார்.
2023ம் ஆண்டுக்கான திட்டங்களையும் வகுக்க, கடந்த ஆண்டு இறுதியில் தனது ஆளும் உழைப்பாளர்கள் கட்சியின் உறுப்பினர்களை கூட்டினார்.
அவரது பட்டியலில் முதன்மையாக இருப்பது, அணு ஆயுத உற்பத்தியை அதிவேகமாக அதிகரிப்பது. தென் கொரியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்தக்கூடிய சிறிய, தந்திரோபாய அணு ஆயுதங்களை பெருமளவில் உற்பத்தி செய்வதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
இது மிக முக்கிய வளர்ச்சி என்று குறிப்பிடுகிறார் சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் அணு ஆயுத நிபுணரான அங்கித் பாண்டா.
தந்திரோபாய அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டுமென்றால், வடகொரியா முதலில் சிறிய வகை ஏவுகணையில் பொறுத்தக்கூடிய சிறிய அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டும். இதனை செய்யும் ஆற்றல் பியோங்யாங்கிற்கு உள்ளதா என்பதை உலகம் இதுவரை பார்த்ததில்லை.
2022இன் பெரும்பகுதியை இதுபோன்ற சாதனத்தை சோதிக்கவே அந்நாட்டு உளவுத்துறை செலவிட்டது. எனினும் சோதிக்க முடியவில்லை. ஒருவேளை, அந்த ஆண்டாக 2023 இருக்கக்கூடும்.
கிம்மின் புத்தாண்டு பட்டியலில் உள்ள அடுத்த முக்கிய பொருள் உளவு செயற்கைக்கோள் ஆகும். இந்த வசந்த காலத்தில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய மாதிரியை விட குறைந்த எச்சரிக்கையில் அமெரிக்காவை தாக்கக் கூடிய உறுதியான திடபொருள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்குவதும் அவரது பட்டியலில் உள்ளது.
எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளுக்கு நடுவே, தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வது, தனது அணு ஆயுதங்களை செம்மைப்படுத்தி விரிவுப்படுத்துவது ஆகியவற்றில் வட கொரியா கவனம் செலுத்தும் என்பதால் 2023 ஆம் ஆண்டு 2022 ஆம் ஆண்டிற்கான ஒரு உணர்வைக் கொண்டிருக்கும் என்று நாம் ஊகிக்க முடியும்.
புத்தாண்டுக்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே தனது முதல் ஏவுகணை சோதனையையும் அந்நாடு நடத்தியது.
தற்போது, மோதல் ஏற்பட்டால் தனது ஏவுகணைகளை பயன்படுத்த வடகொரியா தயாராகி வருவதால், 2023இல் வட கொரியாவின் ஏவுகணை ஏவுதல் என்பது வெறும் சோதனையாக மட்டுமே இருக்காது. போர் பயிற்சியாகவும் இருக்கும் என்று திரு.பாண்டா கூறுகிறார்.
பேச்சுவார்த்தை ஏதாவது?
இத்தகைய விரிவான இலக்கு பட்டியல்களை கொண்டுள்ளதால், இந்த ஆண்டு அமெர்க்காவுடன் கிம் ஜாங் உன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.
அணு ஆயுத நீக்கம் தொடர்பான கடைசிக்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2019ம் ஆண்டில் முடிவுபெறாமல் போனது. அதன் பின்னர், எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் அவர் விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை.
வட கொரியா அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அழிவை ஏற்படுத்த வல்லது என்பதை அவர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்த பின்னர், அவர் தனது நிபந்தனைகளின் பேரில் பேச்சுவார்த்தை நடத்த திரும்புவார்.
கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா சீனாவுடனும் ரஷ்யாவுடனும் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது அதன் வெளியுறவுக் கொள்கையை அடிப்படையாக மாற்றும் செயல்பாட்டில் இருக்கலாம் என்று 20 ஆண்டுகளாக அமெரிக்க அரசாங்கத்தில் வட கொரியா ஆய்வாளராகப் பணியாற்றியவரும் தற்போது திறந்த அணுசக்தி வலையமைப்புடன் உள்ள ரேச்சல் மினியோங் லீ கூறுகிறார்.
“தனது பாதுகாப்பிற்கும் வாழ்வாதரத்துக்கு அமெரிக்கா அவசியமானது அல்ல என்று வட கொரியா கருதத் தொடங்கினால், அது அணு ஆயுத பேச்சுவார்த்தையின் வடிவத்தையும் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கும்” என்றும் அவர் கூறுகிறார்.
கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றம்
அதேவேளையில், கொரிய தீபகற்பத்தில் ஒரு பதற்றமான சூழல் அதிகரித்து வருகிறது. வட கொரியாவின் ஒவ்வொரு “ஆத்திரமூட்டலுக்கும்” தென் கொரியாவும் சில நேரங்களில் அமெரிக்காவும் பதிலடி கொடுக்கின்றன.
2022ஆம் ஆண்டு மே மாதத்தில் இது தொடங்கியது. தென்கொரியாவின் புதிய அதிபர், வட கொரியா விவகாரத்தில் கடுமையாக இருப்போம் என்று உறுதியளித்தார்.
வடகொரியாவை தடுத்து நிறுத்துவதற்கான சிறந்த நடவடிக்கை என்பது ராணுவ பலம் மூலம் பதிலளிப்பது என தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் நம்புகிறார்.
இதையடுத்து, அமெரிக்காவுடன் இணைந்து பெரிய அளவிலான கூட்டு ராணுவ ஒத்திகைகளை அவர் மீண்டும் தொடங்கினார்.
இதற்கு வட கொரியா எதிர்ப்பு தெரிவித்ததோடு அதிகளவில் ஏவுகணைகளை ஏவத்தொடங்கியது. இது இரு தரப்பும் தங்கள் எல்லைக்கு அருகில் போர் விமானங்களை பறக்கவிடுவது மற்றும் கடலுக்குள் பீரங்கிகளை சுடுவது போன்ற ராணுவ நடவடிக்கையின் பழிக்கு பழி சூழலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், தென் கொரிய வான் எல்லைக்குள் எதிர்பாராத விதமாக வடகொரியா சில ட்ரோன்களை பறக்கவிட்டது இந்த சூழலை மேலும் மோசமடைந்தது.
இந்த ட்ரோன்களை தென் கொரியாவால் சுட்டு வீழ்த்த முடியாமல் போனது, அதன் பாதுகாப்பில் குறையுள்ளது என்பதை வெளிச்சம் காட்டியது.
மேலும், வட கொரியாவின் செயல்களால் இதுவரை பெரிதும் அச்சம் அடையாமல் இருந்த தென் கொரிய மக்களிடையேயும் இது கவலையை ஏற்படுத்தியது.
வட கொரியாவின் ஒவ்வொரு ஆத்திரமூட்டும் செயலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் தண்டனை வழங்கப்படும் என்றும் தென் கொரிய அதிபர் சபதம் செய்தார்.
வட கொரியாவை கண்காணிக்கும் ஒரு பகுப்பாய்வு சேவை நிறுவனமான கொரியா ரிஸ்க் குரூப்பின் தலைமை நிர்வாக அதிகாரி, சாட் ஓ’கரோல், இந்த போக்கு 2023ல் நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் இதனால் இறப்புகள் கூட ஏற்படலாம் என்றும் கணித்துள்ளார்.
வடகொரியாவோ அல்லது தென் கொரியாவோ பதிலளிக்க முயன்றால், அது உண்மையான துப்பாக்கிச்சூட்டை நாம் காணும் பதற்றமான சூழலுக்கு இட்டுச்செல்லும் என்று அவர் கூறுகிறார்.
ஒரு தவறு அல்லது தவறான கணிப்பு கூட சூழலை மிக மோசமாக மாற்றிவிடும் என்பது அவரது கருத்து.
வட கொரியாவுக்கு உள்ளே
பெருந்தொற்று காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான எல்லை மூடல் நடவடிக்கைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வர்த்தக நடவடிக்கைகள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. இது உணவு மற்றும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாக மனிதாபிமான அமைப்புகள் நம்புகின்றன. கடந்த ஆண்டு, அரிதாக கிம் `உணவு நெருக்கடி` குறித்து பேசினார்.
தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் வட கொரியா முதன்முதலாக ஒப்புக்கொண்டது. எனினும், சில மாதங்களிலேயே தொற்றில் இருந்து மீண்டதாக கூறியது.
எனவே சீனாவுடனான தனது எல்லையை மீண்டும் திறந்து மக்கள் மற்றும் பொருட்களை அனுமதிக்கும் ஆண்டாக 2023 இருக்குமா?
சீனா தனது எல்லையை மீண்டும் திறப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வட கொரியாவும் தயாராகும் விதமாக எல்லையோரத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை செலுத்திவருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் ஆபத்தான சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு லீ எச்சரிக்கையாக இருக்கிறார்.
“சரிவின் விளிம்பில் உள்ள அதன் பொருளாதாரம் போன்ற அவசரநிலையைத் தவிர, உலகளவில், குறிப்பாக அண்டை நாடான சீனாவில் தொற்றுநோயைக் கருத்தில் கொள்ளும் வரை வட கொரியா தனது எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்க வாய்ப்பில்லை” என்று அவர் கூறினார்.
இதேபோல், கிம்மிற்கு பிறகு வட கொரியாவை யார் வழிநடத்துவார் என்பது தொடர்பாக கவனிக்க வேண்டியதிலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது திட்டம் என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால், தனது குடும்ப உறுப்பினர்கள் விவகாரத்தில் இறுக்கத்தை கடைபிடிக்கும் கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு தனது குழந்தைகளில் ஒருவரை முதல் முறையாக பகிரங்கமாக வெளிப்படுத்தினார் . அப்பெண் கிம்மின் மகள் கிம் சூ-ஏ என்று கூறப்படுகிறது.
அவர் மூன்று ராணுவ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது. இதேபோல், புத்தாண்டு தினத்தில் மேலும் அதிக புகைப்படங்கள் வெளியானது. எனவே, கிம்மிற்கு பின்னர் இவர்தானா என்ற ஊகத்திற்கு இது வழிவகுத்துள்ளது.
வடகொரியா கணிக்கக்கூடியதாக இருந்தாலும், நிச்சயமாக 2023ஆம் ஆண்டு கடந்த ஆண்டைப் போலவே கணிக்க முடியாததாகவும் நிலையற்றதாகவும் இருக்கும்.