குரு வணக்கம் பாடும் போது எழுந்து நிற்காத கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்!!
கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல் மந்திரியாக பினராயி விஜயன், 2-வது முறையாக ஆட்சி செய்கிறார். முற்போக்கு சிந்தனை கொண்ட அவர் விழாக்களில் பங்கேற்கும் போது சீர்திருத்த கருத்துக்களை கூறுவது வழக்கம். பல நேரங்களில் இது சர்ச்சையை ஏற்படுத்தும். என்றாலும் அவர் தனது கருத்துகளில் இருந்து பின்வாங்குவதில்லை. இந்த நிலையில் கண்ணூரில் ஸ்ரீநாராயணா கல்லூரியில் நடந்த விழாவில் பினராயி விஜயன் பங்கேற்றார். நிகழ்ச்சி தொடங்கியதும், முதலில் குருவணக்கம் பாடல் பாடப்பட்டது. அப்போது மேடையில் இருந்த பினராயி விஜயன், பாடல் பாடும் போது எழுந்து நிற்கவில்லை.
மற்றவர்கள் எழுந்து நின்ற போது அவரும், மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ. கடனபள்ளி ராமச்சந்திரனும் அமர்ந்தே இருந்தனர். இந்த படங்கள் சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறும் போது, கூட்டம் தொடங்கும் போது குருவணக்கம் பாடுவது வழக்கம். குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் எழுந்து நின்றிருக்க வேண்டும்.
அவ்வாறு அவர் நிற்காமல், அமர்ந்தே இருந்தது தவறு. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார். தற்போது கேரள அரசியலில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.