பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரிடம் அத்துமீறல் – திமுக நிர்வாகிகள் 2 பேர் தற்காலிக நீக்கம்!!
விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு கலந்து கொண்டிருந்த நிர்வாகிகள் சிலர் மது போதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தலைவர்கள் பேசும்போதே பின்னாலிருந்து கூச்சல் எழுப்பி கூட்டத்தில் பிரச்சனை செய்த அவர்களை அங்கிருந்த நிர்வாகிகள் கண்டித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை தொடர்ந்து அவர்கள் ஆபாசமாக பேசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நிகழ்ச்சி முடிந்ததும் பாதுகாப்புப் பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகே இருந்த போலீசார் ஒருவரை பிடித்த நிலையில், மற்றொருவர் தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பதும் இவர்கள் இருவரும் தி.மு.க. நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், பெண் போலீசாரிடம் அத்துமீறி நடந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகளை தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
பணியில் இருந்த பெண் காவலரிடம் திமுகவினர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.