உக்ரைன் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் – வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தல்!! I
உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதலைப் பொறுத்தவரை இருநாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அணுகுமுறைக்கு திரும்ப வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் 6 நாள் பயணமாக கடந்த வாரம் புறப்பட்டுச் சென்றார். சைப்ரஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் ஆஸ்திரியா வந்துள்ளார். தலைநகர் வியன்னாவில் ஆஸ்திரியா வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க்கை அவர் நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதலைப்பொறுத்தவரை இது போருக்கான காலம் அல்ல என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அணுகுமுறைக்கு இரு நாடுகளும் திரும்புவது கட்டாயமாகும். நீண்டகால மோதல்கள் எந்தவொரு நாட்டின் நலனுக்கும் உதவாது. இரு நாட்டு தலைவர்களுடனும் எங்கள் பிரதமர் தொடர்புகொண்டு எங்களது கருத்தை வலியுறுத்தி வருகிறார்” என்றார்.
பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்: முன்னதாக அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஆஸ்திரிய அரசு ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சீர்திருத்தத்தை உடனே மேற்கொள்ள வேண்டும் என அழுத்தம் தருவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாடு (இந்தியா) பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களில் ஒன்றாக இல்லை. நிரந்த உறுப்பினருக்கான பலன்களை அனுபவிக்கும் நாடுகள், பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் அவசரம் காட்ட மறுக்கின்றன. இது மிகவும் குறுகிய கண்ணோட்டம் கொண்டது என நான் கருதுகிறேன்.No