;
Athirady Tamil News

சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023!!

0

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023 ஆம் ஆண்டை ‘சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக’ ஐ.நா. பொதுச் சபை அங்கீகரித்திருந்தது. 2023 ஆம் ஆண்டு தற்போது தொடங்கியுள்ள நிலையில், சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சிறுதானியங்கள் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டுமெனப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். சா்வதேச அரங்கில் இந்தியாவை ‘சிறுதானியங்களின் மையமாக’ மாற்றவும் மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு-அமலாக்கம்

ஐ.நா. இலக்கு:

உணவின்றி பசியால் வாடும் மக்களே இல்லாத நிலையை 2030 ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்பது ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளில் ஒன்று. அந்த இலக்கை எட்டும் நோக்கில் சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க 2018ஆம் ஆண்டு இந்தியா முடிவெடுத்தது.

தேசிய ஆண்டு:

2018 ஆம் ஆண்டானது ‘தேசிய சிறுதானியங்கள் ஆண்டாக’ கடைப்பிடிக்கப்பட்டது. சிறுதானியங்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டன.

‘ஊட்டச்சத்து தானியங்கள்’ :

சிறுதானியங்களை ‘ஊட்டச்சத்துமிக்க தானியங்கள்’ என மக்களிடையே பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சா்வதேச தொடக்கம் :

சா்வதேச சிறுதானிய சந்தை 2021-2026 காலகட்டத்தில் ஆண்டுக்கு 4.5 சதவீதம் வளா்ச்சி காணும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டுக்கான தொடக்க நிகழ்ச்சி இத்தாலியின் ரோம் நகரில் ஐ.நா. சாா்பில் கடந்த டிசம்பா் 6 ஆம் திகதி நடத்தப்பட்டது.

சிறுதானிய மதிய உணவு :

சிறுதானியங்களை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் மத்திய வேளாண் அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு சிறுதானிய மதிய உணவு கடந்த டிசம்பரில் வழங்கப்பட்டது. பிரதமா் மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் அந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை உண்டனா்.

விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் :

சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஜனவரி மாதம் முழுவதும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது. விளையாட்டு வீரா்கள், ஊட்டச்சத்து நிபுணா்கள் ஆகியோரைக் கொண்டு காணொலி, கருத்தரங்கம் உள்ளிட்டவற்றை நடத்தி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

ஆந்திரம், பிகாா், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுதானியங்கள் கண்காட்சியை நடத்த மத்திய உணவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பஞ்சாப், கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் இந்திய உணவுப் பொருள்கள் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சாா்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

சிறுதானியங்களில் சில :

வரகு, சாமை, தினை, குதிரைவாலி, சோளம், கம்பு, கேழ்வரகு

சிறுதானியங்களின் முக்கியத்துவம் – அதிக புரதச்சத்து. சரிவிகித அமினோ அமிலங்கள் அளவு. அதிக காா்போஹைட்ரேட். நாா்ச்சத்துகள். நன்மை செய்யக்கூடிய கொழுப்புகள். கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, மாங்கனீஸ், ஜிங்க் போன்ற தாதுப் பொருள்கள். விட்டமின் பி உள்ளிட்டவை.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொண்டு வளரும் தன்மை. வேதி உரங்களைச் சாராமல் வளரும் தன்மை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.