மே. வங்கத்தில் சேவையை தொடங்கிய 3வது நாளே வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு, கண்ணாடி சேதம்: என்ஐஏ விசாரணைக்கு பாஜ வலியுறுத்தல்!!
மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்ட மூன்றே நாட்களில் அதன் மீது கல்வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒரு பெட்டியின் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா ரயில் நிலையத்தில் கடந்த 30ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தாயார் காலமான நிலையிலும் இறுதி சடங்குக்கு பின், பிரதமர் மோடி காணொலி மூலம் இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது முதல்வர் மம்தா மேடை ஏறாமல் அமர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரயில் சேவை தொடங்கப்பட்ட 3வது நாளான நேற்று முன்தினம் வந்தே பாரத் மீது மர்மநபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். திங்களன்று மாலை மால்டா நகரில் குமார்கஞ்ச் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது வந்தே பாரத் மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் ரயிலின் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவு சேதமடைந்துள்ளது. கல்வீச்சு சம்பவம் நடந்தபோதும் ரயில் வழியில் எங்கும் நிறுத்தப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஐஏ விசாரணை தேவை
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரயில்சேவை தொடக்கவிழாவின்போது பாஜ தொண்டர்கள் ‘‘ஜெய் ராம்” என முழக்கமிட்டதற்கு பழிவாங்கும் செயலாக கல்வீசப்பட்டுள்ளதாக மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இதேபோல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த சம்பவம் குறித்த விசாரணையை பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சகம் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் டிவிட்டரில் வலியுறுத்தி இருக்கிறார்.