சபரிமலையில் ஜன.11ம் தேதி முதல் சமையல் செய்ய தடை: தீயினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதமாக தடை விதிப்பு!!
சபரிமலையில் பம்பா முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் சமையல் செய்ய ஜனவரி 11ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. அதன்படி வருகிற 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. இதையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்க சபரிமலைக்கான சிறப்பு அதிகாரியான கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டு விஷ்ணுராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மாஜிஸ்திரேட்டு விஷ்ணுராஜ் பேசியதாவது; ஜனவரி 11-ம் தேதி முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர், 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நிறைவு பெற்ற பின்னரே ஊருக்கு திரும்புவார்கள்.
எனவே சன்னிதானத்தில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். அதை சமாளிக்க தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இந்த சூழலில், பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.