உக்ரைன் தாக்குதலில் 89 வீரர்கள் உயிரிழப்பு: போரில் ரஷ்யாவுக்கு முதல் பேரிழப்பு!!
மெகிவ்வா நகரில் ரஷ்யாவின் ராணுவ தளத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 89 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ரஷ்ய ராணுவ தரப்பில், “தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மக்கிவ்கா நகரில் ரஷ்ய ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் வரை பலியாகினர்.
பலர்காயமடைந்தனர்.புத்தாண்டை முன்னிட்டு வீரர்கள் தங்களது கைபேசிகளை பயன்படுத்தினர். இதனை பயன்படுத்திதான் வீரர்களின் இருப்பிடத்தை அறிந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கி ஒருவருடம் நெருங்கி வரும் நிலையில், ரஷ்ய தரப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய சேதமாக இது கருதப்படுகிறது. இந்த நிலையில் மக்கிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்ய தரப்பில் 400 வீரர்கள் வரை பலியானதாகவும் 300 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. சமீபத்தில் உக்ரைனின் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வழங்க தயார் என்று அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
புத்தாண்டுக்கு முந்தைய நாளில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யா கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஒரே நாளில் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகள் உக்ரைனின் பல்வேறு இடங்களில் ஏவப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.