சொந்த தொகுதிக்கு செல்ல சந்திரபாபுவுக்கு ஆந்திர போலீஸார் அனுமதி மறுப்பு – குப்பத்தில் தொண்டர்கள் மீது தடியடி!!
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய நேற்று பிற்பகல் வந்தார். அவருக்கு கர்நாடகா – ஆந்திர மாநில எல்லையான ஜேபி கொத்தூரு என்னும் இடத்தில் ராட்சத கிரேன் உதவியால் மிகப்பெரிய மாலையை தொண்டர்கள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆனால், அங்கிருந்து சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதிக்கு காரில் செல்ல முயன்ற போது, பெத்தூரு எனும் இடத்தில் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். ஆந்திர அரசு பிறப்பித்துள்ள போலீஸ் சட்டம் 30-ன் கீழ் யாரும் பொதுக்கூட்டமோ அல்லது ஊர்வலமோ நடத்த கூடாது என கூறி, உத்தரவுக்கான பிரதியை அவரிடம் வழங்கினர். ஆனால், இதனை சந்திரபாபு நாயுடு வாங்க மறுத்து, போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் கடந்த மாதமே குப்பம் வருவதாக அறிவித்திருந்தேன். அரசாணை பிறப்பித்த பின்னர், முதல்வர் ஜெகன் செவ்வாய்க்கிழமை (நேற்று முன் தினம்) ராஜமுந்திரியில் ஊர்வலமாக சென்று பொதுக்கூட்டம் நடத்தி உள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு ஒரு நீதி. தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு நீதியா? இது என்ன நியாயம்? இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
பின்னர் அவர் பாதயாத்திரை யாக நடந்து சென்று மக்களை சந்தித்தார். ஒவ்வொரு வீட்டிலும் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பலத்த வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, சந்திரபாபு நாயுடுவை வரவேற்க பெத்தூருசெல்ல முயன்ற தெலுங்கு தேசம் கட்சியினரை குப்பம் போலீஸார் தடுத்து நிறுத்தியதோடு, அவர்களை கலைந்து செல்லுமாறு தடியடி நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.