இந்தியாவில் 2021-ஐ காட்டிலும் 2022ல் விலைவாசி உயர்வு: 73% மக்கள் கருத்து!!
2021-ஐ காட்டிலும் 2022ல் விலைவாசி உயர்ந்திருந்ததாக 73% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்குத் தேவையான பொதுவான பொருட்களுக்கான செலவு, அத்தியாவசியமான மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான செலவு, உடல் நலத்திற்கான செலவு, பத்திரிகைகளுக்கான செலவு, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாவுக்கான செலவு என 5 வகையான செலவினங்கள் கடந்த ஆண்டு எவ்வாறு இருந்தன என்பது தொடர்பாக ஏக்ஸிஸ் மை இண்டியா எனும் அமைப்பு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வீட்டுக்குத் தேவையான பொதுவான பொருட்களுக்கான செலவு கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டை விட உயர்ந்திருந்ததாக 73 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவப் பரிசோதனைகள், ஆரோக்கிய உணவு ஆகியவை அடங்கிய ஆரோக்கியத்திற்கான செலவு கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட உயர்ந்துவிட்டதாக 39% குடும்பங்கள் தெரிவித்துள்ளன. விலைவாசி உயர்வுக்கு பணவீக்கம்தான் காரணம் என 50% மக்கள் தெரிவித்துள்ளனர்.
முதலீடு: இந்த ஆண்டு முதலீடுகளை எவ்வாறு திட்டமிடுவீர்கள் என்ற கேள்விக்கு ம்mயூச்சுவல் ஃபண்டு, காப்பீடு, தங்கம், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வோம் என 40% மக்கள் தெரிவித்துள்ளனர். நிலம் மற்றும் வீடு வாங்குவதில் முதலீடு செய்வோம் என 16% மக்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் படிப்புக்கு முதலீடு செய்வோம் என 34% மக்கள் தெரிவித்துள்ளனர்.
மொபைல் மற்றும் இணைய பயன்பாடு அதிகரித்திருப்பதாக 52% மக்கள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக்-தான் அதிகம் பயன்படுத்துவதாக 35% மக்கள் குறிப்பிட்டுள்ளனர். யூடியூப் பார்ப்பது அதிகரித்திருப்பதாக 25% மக்கள் தெரிவித்துள்ளனர்.