நியாயமற்ற வரி சீர்திருத்தம் – ரணிலுக்கு அனுப்பப்படும் மகஜர்!
நியாயமற்ற வரி சீர்திருத்தத்தை சரி செய்யுமாறு கோரி இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தனர்.
இன்று மதியம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள குறித்த அலுவலகத்தில் முன்பாக தொழில் மின்சார சபை தொழிலாளர்களும் சேவை பணியாளர்களும் இந்த கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.
மகஜர்
அரசின் வரி அதிகரிப்பை ரத்து செய்து நியாயமான முறையில் சீர் செய்யுமாறு கோரி அனைத்து பணியாளர்களும் கையொப்பமிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிற்கு மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளனர்.
அதேவேளை சிறிலங்கா அதிபருக்கு அவர்கள் முன்னர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் உள்ளடங்கிய மாற்று யோசனைகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் வரி விதிப்பு முறையில் விரைவில் திருத்த வேண்டிய முறை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய,
01. தனிநபர் வருமான வரிக்கான வரி விலக்காக காட்டப்பட்டுள்ள, ஆண்டுக்கு ரூ. 12 இலட்சம் என்பதை ஆண்டுக்கு ரூ. 24 இலட்சமாக மாற்றியமைத்தல் (மாதாந்த வரி விலக்காக ரூ. 2 இலட்சமாகுமாறு)
02. முன்மொழியப்பட்ட வரைவில் முன்வைக்கப்பட்ட தனிநபர் வருமான வரிவிதிப்பின் சதவீதங்களை 6% முதல் 36% வரையான அளவுகளை 4% முதல் 24% வரை 4% ஆக அதிகரிக்கும் படி மாற்றியமைத்தலும் முன்மொழியப்பட்ட வரைவில் வழங்கப்பட்ட வரி விதிப்பு வகைகளில் (Tax Slabs) அளவை ரூ. 5 இலட்சம் முதல் ரூ. 6 இலட்சம் வரை அதிகப்படுத்துதல்.
03. பொது மக்களின் வரிப்பணம் அரசாங்கத்தினால் செலவிடப்படுவதை கண்காணிக்க வெளிப்படையாக அதனை வருடாந்தம் பொதுமக்களிடம் தெரிவிப்பதற்காக நாடாளுமன்றத்தில் பொறுப்பான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுதல்.
என்பன தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.