வருவாயை அதிகரிக்க அரசியல் விளம்பரங்கள் மீதான தடையை தளர்த்தியது டிவிட்டர்!!
வருவாயை அதிரிகப்பதற்காக, 3 ஆண்டுக்கு முன் விதிக்கப்பட்ட அரசியல் விளம்பரங்கள் மீதான தடையை டிவிட்டர் நிர்வாகம் தளர்த்தி உள்ளது. உலகம் முழுவதும் எந்த நாட்டில் இருந்தும் அரசியல் விளம்பரங்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என டிவிட்டர் நிர்வாகம் கடந்த 2019ம் ஆண்டு அறிவித்தது. அரசியல்வாதிகள் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
அப்போதைய டிவிட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி, ‘‘இணைய விளம்பரங்களுக்கு பெரிய சக்தி இருக்கிறது. இது வணிக ரீதியில் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு நல்ல பலன்கள் கிடைக்கின்றன. ஆனால் இதே போல அரசியல் கருத்துகளுக்கு விளம்பரம் செய்யும் போது அது அரசியலுக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். இந்த அரசியல் விளம்பரங்கள் ஒருவர் யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது’’ என தனது தடை முடிவுக்கு விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், 3 ஆண்டுக்குப் பிறகு தற்போது இந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட டிவிட்டில், ‘அமெரிக்காவில் அரசியல் சார்ந்த விளம்பரங்களுக்கான எங்கள் விளம்பரக் கொள்கையை தளர்த்துகிறோம். வரும் வாரங்களில் நாங்கள் அனுமதிக்கும் அரசியல் விளம்பரங்களை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இந்த விளம்பரங்கள் பொது உரையாடலை எளிதாக்கும். இந்த விளம்பரங்கள் டிவி மற்றும் பிற ஊடகங்களின் கொள்கையுடன் பொருந்தும்’ என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், பேஸ்புக் நிறுவனம் கடந்த 2020ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு விதித்த அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளுக்கான விளம்பரங்கள் மீதான தடையை 2021 மார்ச் மாதத்தில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.